பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்ததாகவும் அமைச்சர்கள் ஐ,பெரியசாமி, சக்கரபாணி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூவரை சேர்ந்த ஜெயகோபி லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை நிராகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் லோக் ஆயுக்தா உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாகவும் உயிரிழந்த பூச்சிகள் அதில் காணப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வருக்கு புகாரளித்தேன். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு கூட்டணியில் புதிய படம்!
தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!