kumaraguru mla to apology in public meeting

மன்னிப்பு கேட்பதற்காகவே ஒரு பொதுக்கூட்டம்: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசியல்

தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசிய உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பொதுக்கூட்டம் நடத்தி தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 4)  உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சார்பில் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி அ தி மு க மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் எம். எல். ஏவுமான குமரகுரு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாக பேசினார்.

குமரகுரு பேச்சை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட எஸ். பியிடம் குமரகுகுரு மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன்னுடைய பேச்சில் தவறு இருப்பதை உணர்ந்த குமரகுரு “செப்டம்பர் 20 ஆம் தேதி நான் பொதுக்கூட்டத்தில் வாய் தவறுதலாக சில வார்த்தைகளை பேசிவிட்டேன்.

அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குமரகுரு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதால் போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக கள்ளக்குறிச்சி தி மு க தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம். எல். ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக குமரகுரு எம். எல். ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்டோபர் 4)  விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில், “முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதனால் குமரகுரு எம். எல். ஏவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது” என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குமரகுரு தரப்பில், “கள்ளக்குறிச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதியையும் ஆபாசமாக பேசியதாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு. முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,

“முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசிய எம்.எல்.ஏ குமரகுரு மாவட்ட காவல்துறையிடம் மற்றொரு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டும்.

அந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசியது தொடர்பான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் ஜாமீன் மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரபாஸ் கன்னத்தில் அடித்த ரசிகை: வைரல் வீடியோ!

அண்ணாமலையை மாற்ற கோரிக்கை வைக்கவில்லை: எடப்பாடி

+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *