இரட்டை இலை… ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக கட்சி சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 – 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
என் மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று (டிசம்பர் 4 ) விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, “சூரியமூர்த்தி கொடுத்த மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் தரப்பில் பதில் பெறப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, “இந்த வழக்கில் எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை. எங்கள் தரப்பை கேட்டுவிட்டு தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முடிவெடுக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதிகள், “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுவரை 350 கி.மீ தூரம்: 19ஆவது நாள் நடைபயணத்தில் ராகுல்
சிக்கலில் ஃபார்முலா 4 கார் ரேஸ் : உயர்நீதிமன்றத்தில் SDAT அவசர முறையீடு!