மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக 2011-ஆம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்தும் தனக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் கலாநிதி வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழைகளுக்கு வழங்கும் நிலம் ஆகும். அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. கலாநிதி வீராசாமியின் தந்தை ஆற்காடு வீராசாமி அமைச்சராக இருந்துள்ளதால் அவர் கிராம நத்தம் நிலத்தை பயன்படுத்த தகுதியற்றவர்.
தமிழகத்தில் சமூகநீதி காவலர்கள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் மெட்ரோ நிலத்தை காலி செய்ய வேண்டும். காலி செய்ய தவறும் பட்சத்தில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மகளிர் உரிமை தொகை: தலைவர்கள் கருத்து!
மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?