செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச, உயர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை 41ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பணமோசடி வழக்கை மூன்று மாதங்களில் முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இந்த வழக்கை இன்னும் முடிக்காததால் நீதிபதி அல்லி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதிராமனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “செந்தில் பாலாஜியின் வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மார்ச் 6ஆம் தேதி அன்று கிடைத்தது. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் பிற நிவாரணம் கோரி பல மனுக்களை தாக்கல் செய்து கொண்டிருப்பதால் வழக்கு விசாரணையை அவ்வப்போது ஒத்திவைக்க வேண்டியிருக்கிறது. இதனால் வழக்கை முடிக்க மேலும் 4 மாதங்கள் அவகாசம் வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
ஆனால் செந்தில் பாலாஜி தரப்பில், “நீதித்துறை பணிகளில் அதிக சுமை உள்ளதால் விசாரணைகளை முடிப்பதற்கான காலக்கெடுவை உயர்நீதிமன்றம் நிர்ணயிக்கக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த ஒரு நாளிலேயே உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது
எனவே 4 மாதம் கால அவகாசம் வழங்கக் கூடாது. முடிந்தவரை விரைவில் முடிக்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிடலாம்” என்று நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் எந்த மனுவையும் தாக்கல் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் நீதிபதி ஜெயச்சந்திரன், “உங்களுக்கு என்ன வேண்டும்?. விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா?.
விசாரணை முடியும் வரை விடுதலை அல்லது ஜாமீன் கேட்கமாட்டேன் என்று உறுதி அளிப்பீர்களா?
ஒரே நிவாரணம் கோரி பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால்தான் தாமதம் ஏற்படுகிறது” என்றார்.
அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர் என். ரமேஷ், “விசாரணையை தாமதப்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மனு மீது மனு தாக்கல் செய்கிறார்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியின் கோரிக்கையை ஏற்று 4 மாதங்களில் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர், “நீதிபதி அல்லி சிறந்த நீதிபதி. அவரால் இந்த வழக்கை எவ்வளவு காலத்தில் முடிக்க முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். அதனால் கால அவகாசம் வழங்குகிறேன்.
இந்த உத்தரவு நியாயமற்றது என நீங்கள் நினைத்தால் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லலாம்” என கூறினார்.
இந்த நிலையில் நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் வழக்கை 4 மாதத்தில் முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“கல்கி 2898 AD” முதல்… – இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் என்னனு கவனிங்க…
அமெரிக்காவில் வெப்ப அலை… உருகிய ஆப்ரகாம் லிங்கன் சிலை!