Edappadi to appear master court
கொடநாடு தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைவர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிவைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால், தனக்கான பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உயர் நீதிமன்றத்துக்கு வரும் போது மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.
மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. சட்ட நடைமுறைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கறிஞர் கார்த்திகை பாலனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் முன்பு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கேட்கப்படுகிறது” என கூறினார்.
இதை விசாரித்த நீதிபதிகள், உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை தவிர, நீங்கள் சொல்லும் வேறு எந்த காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவாக வாதிட அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதன்படி வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க எடப்பாடி பழனிசாமி சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க ஆஜராக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்களிடம் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வானமே எல்லை: அடுத்தடுத்து ரோஹித், கோலி சாதனைகளை காலி செய்த சூர்யா!
கட்சி பணி, மாற்று அரசியல்: பிரேமலதாவுக்கு ஈபிஎஸ் அண்ணாமலை வாழ்த்து!
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: அமைச்சர் சொல்வதென்ன?
மிக கனமழை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்!
Edappadi to appear master court