பணிப்பெண்ணுக்கு கொடுமை : திமுக எம்.எல்.ஏ. மகன் மருமகளுக்கு ஜாமீன்!
பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ., மகன், மருமகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் வசித்து வந்தனர்.
இவர்கள் வீட்டில் பணிபுரிந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன், மெர்லினா இருவரும் ஆந்திர எல்லையில் போலீசாரிடம் சரணடைந்தனர்.
அவர்களைக் கைது செய்து அழைத்து வந்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்து வந்தார்.
மனுதாரர்கள் சார்பில், “பெற்றோர் இல்லாமல் தங்கள் நான்கு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும். பணிப்பெண்ணை எங்கள் வீட்டு பெண்ணாகத்தான் பார்த்துவந்தோம். கடந்த டிசம்பர் மாதம் கூட அவரது பிறந்தநாளைக் கொண்டாடினோம்” என கூறி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
பணிப்பெண் சார்பில், “இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை. புகாருக்கு உள்ளான இருவரிடமும் காவல்துறை விசாரணை கூட நடத்தவில்லை. அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், “வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தகுதியான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. புலன் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சென்னை ‘மெட்ரோ’ படைத்த புதிய சாதனை!
செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா!