ரூ.24 கோடி நிதி மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் பண்ட் லிமிடட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து ரூ.24 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன், மகிமைநாதன் ஆகிய மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து, மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, மூன்று பேருக்கும் 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் தேவநாதனை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அலுவலக லாக்கரில் இருந்த மூன்று கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி, நிலம் தொடர்பான 15 ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், ஜாமீன் கோரி தேவநாதன் தொடர்ந்த மனுவையும் நீதிபதி மலர் வாலண்டினா தள்ளுபடி செய்தார்.
இந்தநிலையில், 7 நாட்கள் கஸ்டடி நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு, தேவநாதன், குணசீலன், மகிமை நாதன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, இவர்கள் மூன்று பேரையும் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!