நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Selvam

“தனக்கு எதிரான குற்ற வழக்குகளை நயினார் நாகேந்திரன் வேட்புமனுவில் மறைத்ததால், அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்தநிலையில், “நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது, தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதனால் அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நெல்லை தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று மதுரையை சேர்ந்த மகாராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், “நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக ரூ.1,500 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது. இந்த தவலை அவர் வேட்புமனுவில் மறைத்துள்ளார். அதேபோல, அவருக்கு எதிரான குற்ற வழக்குகளை வேட்புமனுவில் மென்ஷன் செய்யவில்லை.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நான் மனு அளித்தேன். இதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை  மறுபரிசீலனை செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் வழக்காக இதனை தாக்கல் செய்யலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எங்களுக்கு இத்தனை வயது தான் வித்தியாசம்” – உண்மையை உடைத்த இந்திரஜா சங்கர்..!

மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க சதி: மோடியை சாடிய ஸ்டாலின்