ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சட்டவிரோதமானது என எப்படி கூற முடியும் என்று தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 3) கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை பார்த்த மூன்று பேர் ரயிலில் எடுத்துச்சென்ற ரூ.4 கோடியை தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேசவ விநாயகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேசவ விநாயகன் தரப்பில், “தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே புலன் விசாரணை செய்ய அனுமதிக்க கூடாது. சம்மனுக்கு தடை விதித்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, “சட்டவிரோத வழக்கு என்று எப்படி கூற முடியும். விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகுங்கள்” என்றார்.
இதனையடுத்து பதில் மனுத்தாக்கல் செய்ய சிபிசிஐடி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாளை ரிசல்ட் : எடப்பாடியும் தியானம்!
சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை… ஆராதனா, குகன் ஹேப்பி!
அதானே, நாளைக்கு ரிசல்ட் வந்த பின்னர், வழக்கு எப்படி சட்ட விரோதம்னு சொன்னா விட்ருவாங்களா?