அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை… உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Selvam

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) தீர்ப்பளித்துள்ளது.

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார். madras high court aiadmk

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. தனக்கான ஆதரவு நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. madras high court aiadmk

ரவீந்திரநாத் சார்பில், “அதிமுக  உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அதனால் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறப்பட்டது

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணைய சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி, அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share