ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு நாடு முழுவதும் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்வது, மாநில அரசின் அறிவுறுத்தலின் படி செயல்படாமல் இருப்பது, மாநில அரசை தொடர்ந்து விமர்சிப்பது போன்றவை ஆளுநர் ரவியின் செயல்பாடாக உள்ளது.
அவர் தன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிற்கு போட்டியாளராக முன்னிறுத்துகிறார்.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் பல தீர்ப்புகள் மூலம் ஆளுநரின் அதிகாரங்களும் செயல்பாடுகளும் நன்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 164 (1) பிரிவின் கீழ் ஆளுநர் அவரது சொந்த விருப்பப்படி செயல்பட முடியாது முதலமைச்சரின் ஆலோசனை படி தான் செயல்பட முடியும் என்று தெளிவாக கூறுகிறது.
அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையோ, அமைச்சர்களையோ அவரால் நீக்க முடியாது.
அரசியலமைப்பு சட்டம் 164-வது பிரிவு ஷரத்து 1 மூலம் ஆளுநர் ரவி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது இந்திய அரசியலமைப்பு சட்டம் 163,164 பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அமைச்சர்களின் உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும்.
ஷம்ஷேர் சிங் Vs பஞ்சாப் மாநில வழக்கில் (1974) ஆளுநருக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை என்றும், அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவர் செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இதே கருத்தை நபம் ரெபியா Vs துணை சபாநாயகர் (2016) வழக்கில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது, அதில் உச்ச நீதிமன்றம் மீண்டும் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்று கூறியது.
அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி மீதான விவாதத்தின் போது, டாக்டர் அம்பேத்கர் நமது அரசியலமைப்பு அமைப்பில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், மாநில அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தார்.
ஆளுநர் ரவி தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார்.
இதனால் அரசியலமைப்பு கூறுகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்ககூடும். ஆளுநர் ரவி விவகாரத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக தலையிட்டு அவரை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
செல்வம்
திருவண்ணாமலை கோவிலில் ரஜினி தரிசனம்!
சுவிட்சர்லாந்து டைமண்ட் லீக்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா