வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சரணடையும் நாளிலேயே ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) ஆணை பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தங்கள் வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்ணை துன்புறுத்தியதாக குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், “சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாங்கள் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“எனக்கு இந்தி தெரியாது… ஐபிசி என்றுதான் சொல்லுவேன்” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!