சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) தள்ளுபடி செய்துள்ளது. madras high court acquittal selvaganapathy
கடந்த 1995-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக செல்வகணபதி பதவி வகித்தார்.
அப்போது தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 5 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், கூட்டு சதி குற்றச்சாட்டில் ஐந்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
கூட்டு சதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது செல்வகணபதி தரப்பில், “சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து தான் சிபிஐ ஆய்வு செய்தது. பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சுடுகாடுகளுக்கு சுற்றுசுவர் இல்லாததால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களே கூரைகளை சேதப்படுத்திவிட்டனர். மேலும், புகாரளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் சிபிஐ விசாரணை நடத்தவில்லை.
உரிய ஆய்வு நடத்தாமல் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தங்களுக்கு தண்டனை விதித்தது தவறு” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில், “மத்திய அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 100 சுடுகாடு மேற்கூரைகள் அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.23 லட்சம் செலவில் அமைக்க வேண்டிய மேற்கூரைகளுக்கு ரூ.17 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு சதி குற்றச்சாட்டில் அனைவரையும் தண்டிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், செல்வகணபதி உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், கூட்டு சதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த வழக்கையும் தள்ளுபடி செய்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு!
madras high court acquittal selvaganapathy