மத்தியப் பிரதேசத்தின் 76% வாக்குப் பதிவு: யாருக்கு லாபம்?

அரசியல் இந்தியா

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முக்கிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 75.63% வாக்குகள் பதிவான நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் 76% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

தற்போதுவரை ஆட்சியில் இருக்கும் பாஜக, ஆட்சியைப் பிடிக்கப் போராடும் காங்கிரஸ் இரு கட்சிகளுமே இந்த வாக்கு சதவிகிதத்தை தங்களுக்கு சாதகமானது என்று கூறி வருகிறார்கள்.

குறிப்பாக பாஜகவினர், “இவ்வளவு பெருவாரியான வாக்கு சதவிகிதம் என்பது மபி பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு பெண்கள் அளித்த பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்காக சௌஹான் ஏற்கனவே அறிவித்து செயல்படுத்தி வரும் “லாட்லி பெஹ்னா” நிதி உதவித் திட்டத்தின் எதிரொலிதான் இந்த வாக்கு சதவிகித அதிகரிப்பு. மாதம் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்த பெண்களுக்கான தொகையை சௌஹான் பிறகு மாதம் 1250 ரூபாய் என்று உயர்த்தினார். அடுத்து ஆட்சிக்கு வந்தால் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இந்த கேம் சேஞ்சர் திட்டம்தான் இவ்வளவு வாக்கு சதவிகித பதிவுக்கு அச்சாரமாகியுள்ளது” என்று பாஜகவின் பெண் பிரமுகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினரோ, இந்த வாக்கு சதவிகிதம் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையின் வெளிப்பாடு என்கிறார்கள். அதிலும் குறிப்பாக பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் விந்தியா பகுதியின் வாக்கு சதவிகிதம் என்பது பாஜகவுக்கு எதிரான பழங்குடி மக்களின் தீர்ப்பை தெளிவாக சொல்கிறது என்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அடர்த்தியாக வசிக்கும் பகுதி விந்தியா பகுதி. இதில் உள்ள மொத்தம் 7 மாவட்டங்களில் உமாரியாவில் 74.22 சதவீதமும், அனுப்பூரில் 74.85 சதவீதமும், சிங்ராலியில் 72.2 சதவீதமும், ஷாதோலில் 66.52 சதவீதமும், சித்தியில் 63.54 சதவீதமும், சத்னாவில் 66.52 சதவீதமும், ரேவாவில் 64.75 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2018 இல் விந்தியா பகுதியில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. விந்தியா பகுதியில் உள்ள 7 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளில் ஆறில் மட்டுமே அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறை பழங்குடியினரின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கடுமையாக முயன்றது. காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரான கமல்நாத் தனது பிரச்சார உரைகளில் பழங்குடியின மக்களுக்கும் காங்கிரஸுக்குமான நீண்ட கால உறவை தொடர்ந்து நினைவுபடுத்தினார்.

அதுமட்டுமல்ல… பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டார் கமல்நாத். ஜூலை மாதம், சித்தி மாவட்டத்தில் ஒரு பழங்குடியினரின் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சிறுநீர் கழித்த வீடியோ வைரலானது. அதற்கு முன், நேமாவரில் ஒரு இளம் பழங்குடிப் பெண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர்.  மேலும் நீமுச்சில், ஒரு பழங்குடியின ஆண் கயிற்றில் கட்டப்பட்ட வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்டதால் இறந்தார். இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் தனது பிரசார உரையில் பேசிய கமல்நாத், ‘இப்படிப்பட்ட சம்பவங்களில் பழங்குடியினருக்கு எதிராக செயல்பட்ட பாஜகவினரை பழங்குடியின மக்கள் தண்டிப்பார்கள்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பின்னணியில் பழங்குடியினர் நிறைந்த விந்தியா பகுதியில் அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் பாஜகவுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. 2018 தேர்தலில் விந்தியாவில் காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 16-20 இடங்களை கைப்பற்றும் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையை எளிதில் கடந்து அறுதிப் பெரும்பான்மையை காங்கிரஸ் பெறும் என்று பழங்குடியினர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அக்கட்சித் தலைவர்கள்.

சௌஹான் அரசின் சாதனைகள் என்று பாஜக பலவற்றை குறிப்பிட்டாலும், சௌஹானை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவில்லை. அதேநேரம் காங்கிரஸின் கமல்நாத் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வலிமையாக பிரசாரமும் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் 76% வாக்குப் பதிவு என்பது தங்களின் வெற்றிக்கான அறிகுறியாக காங்கிரஸால் கொண்டாடப்பட்டு வருகிறது.

எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகளை வெளியிட நவம்பர் 30 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கும் நிலையில், வாக்கு சதவிகிதத்தை மையமாக வைத்து மத்திய பிரதேசத்தில் விவாதங்கள் தொடர்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜி: உச்ச நீதிமன்றத்தில் மனு!

ChatGPT நிறுவனத்தின் சி.ஈ.ஓ அதிரடி நீக்கம்… இணை நிறுவனர் ராஜினாமா… பின்னணி என்ன?

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்: ஆஸ்திரேலியா கேப்டன் சபதம்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *