மத்திய பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான பாடப்புத்தகங்கள் இன்று (அக்டோபர் 16 ) வெளியிடப்பட்டன.
தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் இது ஒரு முக்கியமான நாள் என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ”இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது” என்றார்.

இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும்.
மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
“நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 51,000 இடங்கள் இருந்தன. இப்போது, 596 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 89,000 இடங்கள் உள்ளன..
நாட்டில் முன்பு 16 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தன, இப்போது எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது,
இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (ஐஐஎம்) எண்ணிக்கை 13 முதல் 20 ஆகவும், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 723 லிருந்து 1,043 ஆகவும், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஒன்பது முதல் 25 வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) உருவாகியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சட்டமன்ற இருக்கை விவகாரம் : ஓபிஎஸ் பேட்டி!
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள்!