பட்ஜெட்டில் 30 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என்று பிடிஆர் பேசியதை நவீன டெக்னாலஜி உதவியுடன் வெட்டி ஒட்டி அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஆடியோ என்றும் முதல்வரையும் என்னையும் பிரிக்கும் எந்த தீய நோக்கமும் வெற்றி பெறாது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்தநிலையில் பிடிஆர் பேசியதாக அண்ணாமலை இன்று இரண்டாவது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு அரசியலுக்கு வந்த நாள் முதலே நான் ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இது தான். முதல்வர் மகனும் மருமகனும் தான் கட்சியே” என்று பேசியிருந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பிடிஆர் ஆடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ வெட்டி ஒட்டப்பட்டது. அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் 30 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என்று பிடிஆர் பேசியதை நவீன டெக்னாலஜி உதவியுடன் வெட்டி ஒட்டி அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
உண்மையிலேயே அவர் பேசியிருந்தால் பாஜகவிடம் தான் அதிகாரம் இருக்கிறதே அவர்கள் நிரூபிக்கட்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பாஜக இதில் அரசியல் செய்கிறார்கள். திமுக ஆதாரப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேசக்கூடியது. பாஜக போல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேச மாட்டோம். பாஜக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை. சொத்துபட்டியல் தான் வெளியிட்டுள்ளது. அண்ணாமலை குற்றம்சாட்டிய அனைவரும் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்