தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1) முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதார பேரவை 2023-ஐ மக்கள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 31) சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
“கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ சேவை என்பது தான் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதன்மையான நோக்கமாகும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என ஏராளமான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளது.
ஏறத்தாழ 11,300-க்கும் மேற்பட்ட மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தை போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் இல்லை.
சுகாதார பேரவை என்பது மாநில சுகாதார சீரமைப்பு திட்டத்தின் அங்கமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் நம்மை துரத்திக்கொண்டிருக்கிறது. இது பல வகைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். மக்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. இன்று சுகாதாரத்துறை செயலாளர் ஒரு அறிக்கை வெளியிடுவார்.
அதன்படி, நாளையில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கும், அவர்களுடன் வருகிற பார்வையாளர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிற உள்நோயாளிகளுக்கும், புறநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், 100 சதவிகிதம் முககவசம் அணிய வேண்டும் என்ற அவசியத்தை அமல்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
இந்தூர் கிணறு விபத்து: தொடரும் சோகம்!
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா?