தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனியார் மருத்துவமனையில் 5 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 22) விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் சரிவர பேசுவதற்கு கூட சிரமப்படும் நிலையில் சென்னை சாலிகிராமம் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயகாந்த் வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி இரவு திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விஜயகாந்துக்கு சளித் தொல்லை மற்றும் இருமல் இருப்பதாகவும், செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி தேமுதிக கட்சித் தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
எனினும், ”செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்று தேமுதிக தலைமை வேண்டுகோள் விடுத்தது.
விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை!
இந்த நிலையில் 5வது நாளாக விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
அவர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகியிடம் பேசினேன்.
ஏற்கெனவே உறுப்பு மாற்று சிகிச்சை நடந்ததை அடுத்து மூச்சுத்திணறல், இருமல் உள்ளதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தேவைப்படும்போது விஜயகாந்துக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜிக்கு மன அழுத்தம் உள்ளது!
மேலும் அவர், ”அதேபோல் தற்போது நடந்தாலே செந்தில்பாலாஜிக்கு மயக்கம் ஏற்படுகிறது. 2 கால்களும் அடிக்கடி மரத்துப் போவதால் தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது.
மேலும் மன அழுத்தம் காரணமாக செந்தில்பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்க வேண்டுமென்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெளக்கம் வியாக்யானம் வெளக்கமாறு: அப்டேட் குமாரு
தனுஷ் குரலில் வைரலாகும் ‘கில்லர் கில்லர்’ பாடல்!