வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினாவில் கூடினர்.
இதில் 30க்கும் மேற்பட்டோர் வெயில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மயக்கமடைந்த நிலையில், இவர்களில் 5 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 7)சென்னை லயோலா கல்லூரி முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில் “இந்திய விமானப் படை கேட்ட அத்தனை வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது.
இந்திய ராணுவத்தின் சார்பாக பல்வேறு மருத்துவக் குழுக்கள் நேற்று மெரினாவில் களத்திலிருந்தது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்சுகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பாராமெடிக்கள் குழுக்கள் ஆங்காங்கே இருந்தன. 100 மருத்துவ படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இந்தியா விமானப் படை கோரிக்கை வைத்தது
தமிழக அரசோ ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன், 20 தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் தயார் நிலையில் வைத்திருந்தது. மேலும் 65 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தார்கள்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசுக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசுக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களில் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன மற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கலந்துக்கொணடார்கள். நேற்று வெயில் மிகவும் அதிகமாக இருந்தது. இதை எதிர்பார்த்த இந்திய விமானப் படை குடை, கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றை மக்கள் எடுத்துவருமாறு கூறியிருந்தது.
இந்த நிகழ்வில் ஏற்பட்ட 5 உயிரிழப்புகள் வருத்தத்துக்குரிய ஒன்றுதான். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அப்படி நினைப்பவர்கள் தோல்வி அடைவார்கள். இந்த ஐந்து நபர்களுமே வெயிலின் காரணமாகத்தான் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் 5 பேரும் இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்கள்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 பேர் வெளி நோயாளிகள் பிரிவிலும், 2 பேர் உள் நோயாளிகள் பிரிவில் உள்ளார்கள். ஒருவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் 46 பேர் வெளி நோயாளிகள் பிரிவிலும், 1 நபர் உள்நோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை பெற்றனர். இருவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர். 46 வெளி நோயாளிகள் அனைவரும் நேற்று இரவே வீடு திரும்பிவிட்டனர்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் 7 பேர் வெளி நோயாளிகள் பிரிவிலும், 1 நபர் உள்நோயாளிகள் பிரிவிலும் உள்ளார். இருவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102, இதில் புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் சென்றவர்கள் 92 பேர். 5 பேர் இறந்துள்ளார்கள். 7 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இந்த 7 பேர்களில், 4 பேர் ஓமந்தூராரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்களில் 2 பேர்களுக்கு அடிதடியால் காயம் ஏற்பட்டுள்ளது, மிச்சம் 2 நபர்களுக்குக் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவருக்குக் குடல் இறக்க நோய், மற்றொருவருக்கு வலிப்பு நோய்” என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா இருந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… அஜித் ஷாலினியின் வைரல் வீடியோ!
அரசு தொகுப்பு வீடு இடிந்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதி!