சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!

அரசியல்

ரூ.4000 கோடி மழை நீர் வடிகால் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிசம்பர் 9) தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்ற மழைக்கால மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். மழைக்காலங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளில் 9 மாத குழந்தை முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பிஸ்கட், தண்ணீர் என பத்தாயிரம் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் ஒரு சில பெண்களை அதிமுகவினர் கோபமாக பேச தூண்டிவிட்டு தங்களது மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

‘ஒரு மாதத்திற்கு முன்பாக சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது’ என்று நான் பேசியதை தற்போது பலரும் ட்ரோல் செய்கிறார்கள். நான் பேசிய மூன்று நாட்களில் 18 செ.மீ மழை பெய்தது. அப்போது தண்ணீர் எங்கும் தேங்கவில்லை.

டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மட்டும் 145 ஆண்டுகளுக்கு முன்னால் பெய்த பெருமழை தற்போது பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பான மழையை காட்டிலும் 12 மடங்கு கூடுதலாக பெய்துள்ளது.

2015-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது சென்னையில் அதிகளவு மழை பெய்துள்ளது. அரசு ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கடந்த ஒரு வாரமாக வேலை செய்கிறார்கள்.

ரூ.4000 கோடி மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார்கள். யாராக இருந்தாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

ஒரே மேடையில் நீங்கள் அனைவரும் ஒரு பக்கம் உட்காருங்கள், அரசின் பிரதிநிதியாக நான் ஒரு பக்கம் உட்காருகிறேன். ரூ.4000 கோடிக்கு எந்தெந்த பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்று அழைத்து சென்று காட்டுகிறேன் அவர்களிடம் ஆதாரபூர்வமாக நேரடியாக விளக்குகிறேன். அவர்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழை!

போலி சுங்கச்சாவடி அமைத்து ரூ.75 கோடி வசூல்… 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *