அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எவ்வளவு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் இனிமேல் தான் சொல்வார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா பயிற்சி செய்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்போது தான் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்துள்ளது. 4 முதல் 5 மணி நேர தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு போஸ்ட் ஆபரேஷன் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வளவு நாள் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும். பின்னர் எவ்வளவு நாள் ஜெனரல் வார்ட் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் இனிமேல் தான் சொல்வார்கள்.
செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்குப் பிறகு மயக்கத்தில் இருப்பதால் அவரிடம் பேச முடியாது. ஆனால் மருத்துவர்களிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். காலை 4 மணியில் இருந்து தற்போது வரை என்ன நிலை என்பதை கேட்டு தெரிந்து கொண்டு தான் இருக்கிறோம்.
இதயத்தில் 3 இடத்தில் அடைப்பு என்பதால், அதை அகற்றுவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிவிட்டது. புகழ்பெற்ற இருதய நிபுணர் ரகுராம் தான் அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
இன்று மாலை தான் செந்தில் பாலாஜிக்கு சுயநினைவு திரும்பும்” என்று தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மோனிஷா
500 டாஸ்மாக் கடைகள் மூடல் : தமிழக அரசு உத்தரவு!
“உயர் நீதிமன்றத்திலேயே முறையிடலாம்” : செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்!