எம்.பில். மருத்துவ உளவியல் படிப்பு: விசிகவின் முக்கிய கோரிக்கை!

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும்‌ எம்.பில். மருத்துவ உளவியல் படிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ உளவியலாளர்களின் சங்கம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ.வுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், “சமீபத்திய உலக சுகாதார நிறுவன கணக்கின்‌ படி 6ல் ஒருவருக்கு மனநலம்‌ சார்ந்த பிரச்சினைகள்‌ உள்ளது. இந்த மனநல பிரச்சினைகள்‌ கொரோனா நோய்‌ தொற்றுக்கு பிறகு 25% அதிகரித்துள்ளதாகவும்‌, குறிப்பாக பெரும்பாலான மாணவர்களிடம்‌ கல்வியில்‌ ஆர்வம்‌ குறைவாகவும்‌ இணையதள அடிமைத்தனம்‌ மிகவும்‌ அதிகரித்து காணப்படுகிறது எனவும் புள்ளிவிபரங்கள்‌ கூறுகின்றன.

2021 ஆம்‌ ஆண்டில்‌ 18,925 தற்கொலைகள்‌ தமிழகத்தில்‌ நடந்துள்ளது. இது இந்திய அளவில்‌ இரண்டாவது இடம்‌ ஆகும்‌. இந்த தற்கொலைகளால்‌ தமிழ்‌நாட்டில்‌ ரூபாய்‌ 30,000 கோடி அல்லது தமிழ்நாட்டின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ 1.3 % இழப்பு ஏற்படுத்துவதாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மதுபோதை பழக்கங்களுக்கு உள்ளாவது, மனஅழுத்தத்தால் ஏற்படும் உடல் நல கோளாறுகள், குறிப்பாக தற்பொழுது அதிகரித்துள்ள மாரடைப்பு மரணங்கள், குற்றம் மற்றும் வன்முறைகள், வாழ்வியல்முறை சார்ந்த நோய்களான சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, உடல்பருமன் மற்றும் ஸ்ட்ரோக் போன்றவற்றிக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

2015-2016 ஆம் ஆண்டு தேசிய மனநல கணக்கெடுப்பின்படி, தமிழ் நாட்டில் 11.5 சதவீதம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாகவும், அகில இந்திய அளவில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட 22.4 சதவீதம் நபர்களுக்கும், 7.3 சதவீதம் வளரிளம் பருவத்தினருக்கும் மதுபோதை பழக்கங்கள் உள்ளதாகவும் அந்த ஆய்வுஅறிக்கை கூறுகிறது. மனநோய் பற்றிய சமூக தாக்கத்தினாலும் களங்கத்தினாலும், மனநலம் பாதிக்கப்பட்ட 80 சதவீத நபர்கள், அதற்கான முறையான மனநல ஆலோசனைகளையோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கோ தேடி செல்வதில்லை.

2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், இந்தியாவில் 12 ஆயிரத்து 928 மருத்துவ உளவியலாளர்களின் தேவை உள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் 910 மருத்துவ உளவியலாளர்களின் தேவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில், 8 அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே மருத்துவ உளவியல் நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ் நாட்டில் ஏழரை கோடி மக்களுக்கு சுமார் 150 மருத்துவ உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 11 மருத்துவ உளவியல் நிபுணர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மட்டுமே இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வருட எம்.பில் (மருத்துவ உளவியல்) படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. அதிலும் ஒரு வருடத்திற்கு 10 மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெறமுடியும்.

அதே வேளையில் இந்த துறையில் போதிய கல்வி தகுதி மற்றும் நிபுணத்துவம் இல்லாத போலி மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், மனநலன் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போதிய மருத்துவ உளவியல் சேவைகள்/ஆலோசனைகள் (உளவியல் மதிப்பீடு, உளவியல் சிகிச்சை & மனநலஆலோசனை) கிடைக்க பெறாமல் அல்லல்படுகிறார்கள்.

தகுதி வாய்ந்த மருத்துவ உளவியல் நிபுணர்களின் சேவைகளைப் பெறுவதற்கு பொது மக்கள் சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டியுள்ளது.

இதனால் அவர்கள் அதிக அலைச்சல், பணவிரயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் அரசுக்கும் பண விரயம் ஏற்படுகிறது.

ஆகையால் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வருட எம்.பில். மருத்துவ உளவியல் படிப்பை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்,

இதனால் ஒரு வருடத்திற்கு சுமார் 350 மருத்துவ உளவியல் நிபுணர்களை உருவாக்க முடியும் மற்றும் வரும்காலத்தில் ஏற்படும் பொருளாதார, மனநல மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முடிவு கட்டமுடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இதுதொடர்பாக சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

“உடலுக்கு மருத்துவம் பார்ப்பது என்பதை தாண்டி உள்ளத்துக்கு மருத்துவம் பார்ப்பது என்பது இன்று காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

மருத்துவ உளவியலில் எம்.பில், படித்தவர்கள் தான் பயிற்சி செய்யமுடியும் என்ற நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., முடித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதுவும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் தான் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ உளவியளாலர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பிரியா

வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு!

பிடிஆர் ஆடியோ – அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: ஜெயக்குமார்

12 மணி நேர வேலை மசோதா: தங்கம் தென்னரசு விளக்கம்!

M.Phil Clinical Psychology
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts