வைஃபை ஆன் செய்ததும் திமுக மாசெக்கள் கூட்ட போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 26) காலை 10.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாசெக்கள் கூட்டத்துக்கு மின்னம்பலத்தில் ஏற்கனவே கூறியது போல சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்டிருந்தார். மாசெக்கள் கூட்டத்தின் முக்கிய அஜெண்டா இளைஞரணி மாநாடு என்பதால், இளைஞரணிச் செயலாளரான உதயநிதி மாசெக்கள் கூட்டத்துக்கு வந்தார். அவரை மாசெக்கள் பலரும் கை கொடுத்து வரவேற்று அமர வைத்தனர். மேடையில் இருந்து பார்க்கும்போது இடது பக்க வரிசையில் கடைசி இரு வரிசைகளில் உதயநிதி ஸ்டாலினும், இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் உள்ளிட்ட ஒன்பது பேரும் அமர்ந்திருந்தனர்.
அனைத்து மாசெக்களும் வந்த நிலையில்… திருவண்ணாமலை தெற்கு மாசெவும் அமைச்சருமான எ.வ. வேலு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இன்று திருவண்ணாமலை தீபத் திருவிழா என்பதால் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அதற்கான பணிகளிலும், தவிர ஒவ்வொரு தீபத் திருவிழாவின் போதும் அவர் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யும் பணியிலும் தீவிரமாக இருந்ததால் மாசெக்கள் கூட்டத்துக்கு வர முடியாததை ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டார்.
காலை 11 மணியளவில் ஆர். எஸ். பாரதி கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். பாரதி பேசிக் கொண்டிருக்கும்போதே அருகே அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, ‘அதை பேசுங்க… அதை பேசுங்க’ என்று அவரைப் பார்த்து சன்னமான குரலில் கூறினார்.
அதற்கு ஆர்.எஸ்.பாரதி, ‘வேட்பாளர் என்ன அவசரப்படுத்துறாரு…’ என்று கூற… பாலுவுக்கு பக்கத்திலே அமர்ந்திருந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், ‘அவர் வேட்பாளர்னு நீங்க எப்படி முடிவு பண்ணீங்க?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டு, கூட்டம் தொடங்கியபோதே ட்விஸ்ட் வைத்தார்.
பொதுச் செயலாளர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினையும், உதயநிதியையும் வெகுவாக பாராட்டி சில நிமிடங்கள் பேசினார்.
அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசத் துவங்கினார்.
”நான் பதினைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன், டாக்டர் முழுமையாக ஓய்வு எடுக்க சொல்கிறார்கள், இருந்தாலும் இந்த கூட்டம் முக்கியமானது என்பதால் கலந்துகொண்டு பேசுகிறேன்.
அறிவாலயத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கூட்டத்தை நடத்த வழக்கமாக ஜெகத்ரட்சகன் அவரது ஹோட்டலில் இடம் கொடுத்துள்ளார், உங்களுக்கு அனைவருக்கும் பலவிதமான உணவுகள் ஏற்பாடுகள் செய்கிறார் என நினைக்கிறேன்.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகதான், இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு திமுகவில்தான் இளைஞர் அணி பலமாக உள்ளது, அதனால் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்.
மாநாட்டில் ஐந்து லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.
இளைஞர் அணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே. என். நேருவை இந்த கூட்டத்தில் அறிவிக்கிறேன், மாநாடு சம்பந்தமாக அவருக்கு முழு அதிகாரம் கொடுக்கிறேன் அவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்.
மேலும் மாநாட்டுக்கு பேனர் தட்டிகள் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும். காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும். மாறாக கொடிகளை கட்டுங்கள், ஏற்றுங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் எடுத்து வந்தால் பணம் செலுத்தி அதற்கான பில்லை வாங்கி தலைமைக்கு அனுப்ப வேண்டும், டீசல் போட்ட பில்லையும் வாங்கி கொடுக்க வேண்டும். யாரும் ஓசியில் எடுத்து வரக்கூடாது, எந்தவிதமான கெட்ட பெயரையும் ஏற்படுத்தக் கூடாது, மீறி யாராவது தவறு செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘நமது ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களை அதிகளவில் செய்திருக்கிறோம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, முதியவர் பென்ஷன், மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் உதவி என ஏராளமாக செய்துள்ளோம், இளைஞர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றதை செய்து வருகிறோம். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. நாம் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். நாற்பது இடங்களிலும் நாம் வெற்றி பெற்றால் நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமர். அதற்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
கூட்டணி பற்றியோ எம். பி. வேட்பாளர்கள் யார் என்பது பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். வேட்பாளர் யார்னு நீங்க முடிவெடுக்க வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன், வேட்பாளர் தேர்வு பணிகளை கூட நான் தொடங்கிவிட்டேன். நீங்கள் தேர்தல் வேலைகளை மட்டும் பாருங்கள். தொடர்ந்து மக்களை சந்தியுங்கள் மக்களுக்கான பணிகளை செய்யுங்கள், பூத் கமிட்டி வேலைகளை பாருங்கள்” என்று முடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் கே..என்.நேரு பேசும்போது தான் நடத்திய மாநாடுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு அதில் இருந்து பல டிப்ஸுகளை வழங்கினார்.
‘மாநாட்டுக்கு வருபவர்கள் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தங்கள் வாகனங்களை விட்டுவிட வேண்டும்., ஒவ்வொரு மாவட்டமும் எங்கே வாகனம் நிறுத்த வேண்டும் என்று சொல்லிவிடுவோம். அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்க்கிங் செய்துவிட வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் தலைவர் மாநாட்டுக்கு வரும்போது பிரச்சினை ஆகிடும். தலைவர் வர்றதுக்கே கஷ்டப்பட்ட அனுபவத்தையெல்லாம் பாத்திருக்கோம். அதனால அப்படி ஒரு நிலைமை ஏற்பட கூடாது. நாங்க என்ன சொல்றமோ அதுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுத்தா போதும். மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டுவோம்’ என்று பேசியிருக்கிறார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி பேசுகையில், “தலைவரின் பெரும் முயற்சியால் இந்த மாநாடு நடக்கின்றது, எனக்கு இது முதல் மாநாடு என்பதால் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை வழியில் நிறுத்திட்டு போயிடாதிங்க. அமைச்சர் நேரு அண்ணன் சொன்னது போல எந்தந்த மாவட்டம் வாகனங்கள் எங்கேங்கே நிறுத்த வேண்டும் என்று அந்த மாவட்ட நிர்வாகிகளை கேட்டு நிறுத்துங்கள், காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள், நடைபெறும் மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் அதற்கான கூட்டத்தை நீங்கள் திரட்டி வரவேண்டும்’ என்று பேசியுள்ளார்.
இதற்கிடையே மாசெக்களான வேலூர் நந்தகுமார், தஞ்சாவூர் துரை சந்திரசேகரன், காஞ்சிபுரம் சுந்தர் போன்றவர்கள் பேசியபோது வாக்காளர் பட்டியல் குறித்து சில தகவல்களை கூறினார்கள்.
’ஒவ்வொரு தொகுதிக்கும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையில் இறந்து போனவர்கள் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளது, அதை நீக்குவதற்கான வேலைகளை அதிகாரிகள் ஆர்வம் காட்டமாட்டேன் என்கிறார்கள்’ என்றதும், அவசரமாக மைக் பிடித்த அமைச்சர் நேரு, ‘ நான் உடனடியாக அதிகாரிகளை கவனிக்க சொல்கிறேன்’ என்று கூறினார்.
சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என். ஆர். இளங்கோ பேசிய போது. ’BL 2 வேலைகளை நாம் சிறப்பாக செய்திருக்கிறோம், தலைமைக்கு சரியாக ரிப்போர்ட் கொடுக்கிறீர்கள், ஆனால் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இன்னும் அப்டேட் செய்யாமல் இருக்கிறீர்கள், அதை அவசரமாக அப்டேட் செய்யுங்கள்’ என்று விரிவாக பேசியுள்ளார்.
இரண்டு மணி நேரம் கூட்டம் என்பதால் இடையில் மசால் வடையும் காபி மற்றும் டீ வழங்கப்பட்டது.
கூட்டம் முடிவில் அனைவருக்கும் முதல்வர் நினைத்தது போல் பல விதமான உணவுகளை ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார் எம். பி. ஜெகத்ரட்சகன்.
ஆனால் கார்த்திகை தீபம் என்பதால் பலர் சைவ உணவு சாப்பிட்டுவிட்டு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டனர், மற்றவர்கள் அசைவ உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
’வேட்பாளர் தேர்வு பற்றி மா.செக்கள் முடிவெடுக்க வேண்டாம். அதை நான் பாத்துக்குறேன், நானே வேட்பாளர் தேர்வை தொடங்கிவிட்டேன்’ என்று ஸ்டாலின் சொன்னதுதான் கூட்டம் முடிந்ததில் இருந்து மாசெக்களிடையே பரபரப்பாகவும் பதற்றமாகவும் பேசப்பட்டு வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அமீர் அண்ணாவிடம் இருந்து போன் வந்தது’… இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம்!