வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இருந்து சோர்ஸுகள் அனுப்பிய சில குறிப்புகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
சில சந்திப்புகள், சில உரையாடல்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. M.K.Stalin warning Senior leaders
“திமுகவில் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. அன்றைக்கு 4 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம், 4 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் என பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
அதற்குப் பின் உடனடியாக அடுத்தடுத்த மாற்றப் பட்டியல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏற்கனவே இருந்த மூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து சில நாட்களில் பிப்ரவரி 23 ஆம் தேதி தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டு, தர்மசெல்வன் மாவட்டச் செயலாளாராக நியமிக்கப்பட்டார்.
கொத்துக் கொத்தாக மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒத்தை ஒத்தையாய் ஏன் அறிவிப்பு வருகிறது என்ற விவாதம் திமுகவுக்குள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் சீனியர்கள் தங்கள் வாரிசுகளுக்கு கட்சிப் பதவிகள் பெறுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனும் தனது மகன் கதிர் ஆனந்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி பெறுவதில் மும்முரமாக இருக்கிறார்.
வேலூர் எம்பியாக இரண்டாவது முறையாக தற்போது பதவி வகிக்கும் கதிர் ஆனந்த் கட்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் நிர்வாகியாக இருக்கிறார். ஆனால், அவரை எப்படியாவது தனது சொந்த மாவட்டமான வேலூரில் மாவட்டச் செயலாளர் ஆக்கிவிட வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார் துரைமுருகன். M.K.Stalin warning Senior leaders
கட்சியில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படும் அறிவிப்புகள், நீக்கப்படும் அறிவிப்புகள் எல்லாமே பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் வெளியாகின்றன. ஆனால், துரைமுருகனுக்கு தனது மகனை மாவட்டச் செயலாளர் ஆக்குவதற்கு முழு அதிகாரம் இல்லை என்ற நிலையில்தான், அவர் இதுகுறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார். ஸ்டாலின் இதுகுறித்து பெரிதாக எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
வேலூர் மாவட்டச் செயலாளராக இப்போது அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் இருக்கிறார். அவரது மாவட்டத்தில் இப்போது வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அண்மையில் நடந்து வரும் மாற்றங்களின் வரிசையில் வேலூர் மாவட்டமும் 3, 2 என்ற அடிப்படையில் பிரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவுகிறது.
இந்நிலையில் கதிர் ஆனந்துக்கு காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய மூன்று தொகுதிகளை அடங்கிய புதிய மாவட்டத்தை வழங்குமாறு துரைமுருகன் காய் நகர்த்துகிறார். இதற்கிடையில் வேலூர் மாநகர செயலாளராக இருக்கும் எம்.எல்.ஏ.கார்த்திகேயன், வேலூர் மாநகர மாவட்டம் ஒன்றை உருவாக்கி அதன் மாசெ ஆவதற்காக தலைமைக்கு நெருக்கமான சிலர் மூலமாக முயற்சிக்கிறார்.

இந்த பின்னணியில் தான்… சில நாட்கள் முன்பு முதல்வரிடம், ‘எனக்கும் வயசாயிடுச்சு… தம்பி கதிர் ஆனந்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தா நல்லா இருக்கும்’ என்று கேட்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். M.K.Stalin warning Senior leaders
அப்போது சற்றே டென்ஷனான ஸ்டாலின், ‘உதயநிதிய டெபுடி சிஎம் ஆக்கறதுக்கு நீங்கள்லாம் (சீனியர்கள்) ஏன் அவ்வளவு தூரம் ஆதரிச்சீங்கனு இப்பதான் எனக்கு புரியுது. அவங்கவங்க வாரிசுகளுக்கு கட்சிப் பதவி வாங்கறதுக்குதானே… வேணும்னா நான் தலைவர் பதவியிலேர்ந்து ரிசைன் பண்ணிக்கிறேன். கட்சியை நீங்களே நடத்திக்கிறீங்களா?’ என்று கோபமாக கேட்டிருக்கிறார். இதுதான் அறிவாலயம் முழுதும் பேச்சாக இருக்கிறது.
ஸ்டாலின் கோபப்பட்டது துரைமுருகனிடம் தான் என்றாலும், அந்த கோபம் துரைமுருகன் மீதானது மட்டுமல்ல… தங்கள் வாரிசுகளுக்கு கட்சிப் பதவியை எதிர்பார்த்து தீவிரமாக முயற்சி செய்யும் சீனியர்கள் மீதானது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
ஸ்டாலினுடைய கோபம் தணிந்திருக்கிறதா, இன்னும் தகிக்கிறதா என்பது அடுத்தடுத்த மாற்ற அறிவிப்புகளில் தெரிந்துவிடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.