வைஃபை ஆன் செய்தவுடன் தமிழ்நாட்டில் திமுக அரசு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது பற்றிய சில தகவல்கள் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக அரசு வரும் மே 7ஆம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் சில நாட்களாகவே திமுகவை உலுக்கி வருகிறது.
ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் பிடிஆர் அமைச்சரவையில் நீடிப்பாரா என்ற கேள்வியும் இத்தோடு சேர்ந்து எழுந்தது. ஏப்ரல் 25 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் பிடிஆர், காத்திருந்தார். வெளியே வந்து கார் ஏற போகும்போது சில நிமிடங்கள் முதலமைச்சரிடம் விளக்கம் கொடுத்தார்.
அப்போது, ‘ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என்று அறிவுறுத்தினார் ஸ்டாலின். ஆனால் மறுநாள் விளக்கம் மட்டுமே கொடுத்தார் பிடிஆர். இந்த சூழலில் இன்று (மே 1) முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் நிதியமைச்சர். இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு மேலும் சூடுபிடித்திருக்கிறது.
ஏற்கனவே அமைச்சர்களின் செயல்பாடுகளை துறை ரீதியாகவும்… அந்த மாவட்ட ரீதியாகவும்… மக்களோடு அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்பு ரீதியாகவும் ஆராய்ந்து முதலமைச்சர் ஒரு தரவரிசை பட்டியலை தயாரித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் சிறப்பான இடம் பெற்ற அமைச்சர்கள் மோசமான இடம் பெற்ற அமைச்சர்கள் என்று இரண்டு வகை இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று ஏற்கனவே மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் எந்தெந்த அமைச்சர்கள் பதவி இழக்க போகிறார்கள், எந்தெந்த அமைச்சர்கள் இலாகா மாறப் போகிறார்கள், எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகப் போகிறார்கள் என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கோட்டை வட்டாரத்தில் விசாரித்த தகவலின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் முதல்வரின் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
வேங்கை வயல் விவகாரத்தில் அமைச்சர் என்ற வகையில் கயல்விழியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று கோட்டை வட்டாரத்திலும் … வேங்கை வயல் விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் தரப்பிலும் முணுமுணுப்புகள் அப்போதே எழுந்தன.
அமைச்சர் நாசர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இளைஞர் அணி காலத்தில் இருந்தே பயணப்பட்டு வருபவர் என்றாலும் ஆவின் ரீதியாக அவர் சந்தித்து வரும் சர்ச்சைகள் துறையைத் தாண்டி அவர் ஏற்படுத்தி வரும் சர்ச்சைகள் என முதலமைச்சரை அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்டால்… அதே முஸ்லிம் கோட்டாவில் அமைச்சராக திருநெல்வேலி அப்துல் வஹாப் அனைத்து முயற்சிகளையும் தீவிரப்படுத்தி உள்ளார்.
அமைச்சரவையில் புதிதாக யார் யார் சேருவார்கள் என்ற விசாரணையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜா முன்னணியில் இருக்கிறார். டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையை தீர்ப்பதற்காக டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக்கப்படலாம் என்கிறார்கள்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனும் அமைச்சர் பதவிக்கு கடுமையாக மோதினார். இருவரில் யாருக்கு கொடுத்தாலும் டெல்டாவில் கட்சி ரீதியாகவும் களரீதியாகவும் பிரச்சனைகள் வரும் என்ற தகவல்களின் அடிப்படையில் தான் டெல்டாவுக்கான அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை முதலமைச்சர் ஒத்தி வைத்தார். இப்போது உதயநிதியின் கோட்டாவில் டிஆர்பி ராஜா அமைச்சராக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
அதேபோல குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் ஸ்டாலினை மூன்று முறை சந்தித்து பேசி உள்ளார். அவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் மாவட்ட திமுகவினர் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் அவரை மதிப்பதில்லை என்ற புகார்கள் சபரீசன் வரைக்கும் சென்று சபரீசன் சமீபத்தில் அமுலுவை அழைத்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் ஜாக்பாட்டாக அமலுக்கு அமைச்சராக வாய்ப்பு இருக்கலாம் என்றும் வேலூர் மாவட்டத்தில் பேச்சு கிளம்பி இருக்கிறது. இதை அறிந்த மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதே போல இன்னும் சில அமைச்சர்களின் பெயர்கள் நீக்க பட்டியலிலும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கை பட்டியலிலும் இருந்து வருகின்றன.
மே 2 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின், ’நமது ஆட்சி இரண்டு வருடங்களை நிறைவு செய்து மூன்றாவது வருடத்திற்கு செல்கிறது. இந்த நேரத்தில் நான் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்து இருக்கிறேன். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமைச்சர்களிடம் நேரடியாகவே தெரிவிக்க இருப்பதாகவும் திமுக உயர்மட்ட வட்டாரத்தில் தகவல்கள் உலவுகின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: தமிழக வரி எவ்வளவு?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் யார் யார்?-முழு விவரம்!