Lying Nirmala Sitharaman

”பொய் பேசும் நிர்மலா சீதாராமன்”- ஸ்டாலின் தாக்கு!

அரசியல்

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி,”மகாபாரதத்தில் திரௌபதியைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவரும் துகிலுரிக்கப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார்.

மணிப்பூர் பெண்களும் அப்படித்தான் தங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணர் வந்தார். ஆனால் மணிப்பூரில் கடவுளும் வரவில்லை, அரசும் காப்பாற்றவில்லை.

மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டதன்படி அந்த குற்றத்தை செய்தவர்கள் மட்டும் அல்ல, குற்றத்தை வெறும் பார்வையாளர்கள்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட தண்டிக்கப்பட்டார்கள்.

அதேபோல் ஹத்ராஸ், கத்வா, உனாவ், பில்கிஸ் பனோ, மல்யுத்த வீராங்கனைகளை வேடிக்கை பார்த்தவர்களும் இந்திய பெண்களால் தண்டிக்கப்படுவார்கள்” என்று பேசினார்.

kanimozhi

மேலும், நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி மத்திய அரசை குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “மணிப்பூராக இருந்தாலும், ராஜஸ்தானாக இருந்தாலும், டெல்லியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நாங்கள் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறோம். இதை நாங்கள் அரசியலாக்குவதில்லை.

1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த முழு சபைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அப்போது முதல்வர் ஆகாத ஜெயலலிதாவின் சேலை, தமிழக சட்டசபையில் இழுக்கப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர்… அந்த ஜெயலலிதாவை தி.மு.க மறந்துவிட்டதா? அன்றைய தினம் ஜெயலலிதா, தான் முதல்வராகும் வரை சட்டசபைக்கு வரமாட்டேன் எனச் சபதம் எடுத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் திரௌபதி குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது..ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளேடான இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் இன்று (ஆகஸ்ட் 12) அளித்துள்ள பேட்டியில், “நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்சப் வரலாற்றைப் படித்து விட்டுத்தான் இப்படி பேசியிருக்க வேண்டும்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர், “ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் முன்பே ஒத்திகை பார்த்தார், அந்த காலகட்டத்தில் நானும் அவருடன் இருந்தேன்” என்று சட்டசபையிலேயே கூறியிருக்கிறார்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ”நாடாளுமன்ற உரையில் தமிழக சட்டசபை நடவடிக்கைகளை திரித்து பேசும் நிர்மலா சீதாராமனின் செயல் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அடுத்த தலைமுறையையும் விழுங்கும் சாதி- ரஞ்சித் காட்டம்!

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

போலா சங்கர்: விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “”பொய் பேசும் நிர்மலா சீதாராமன்”- ஸ்டாலின் தாக்கு!

  1. இந்தம்மாவை பற்றி சுப்பிரமணிய சுவாமி சொல்லலியா? ஏன் அவரது கணவரே கழுவி, கழுவி ஊத்தறாரு. இதுக்கு மேல என்னத்த சொல்ல?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *