திமுக தொழிற்சங்கத்தினரான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சமீபகாலமாக போக்குவரத்துக் கழகத்தில் அரசின் கொள்கை முடிவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் திமுக கட்சித் தலைமையே தனது கட்சியின் ஓர் அங்கமான தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கோபத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மே 29 ஆம் தேதி தொமுசவினர் நடத்திய திடீர் பேருந்து நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் 14 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தலைமை.
இந்த பின்னணியில் தொமுச பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான சண்முகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கட்சித் தலைமை மெமோ அனுப்பியதாக மின்னம்பலத்தில் நேற்று (ஜூன் 15) தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்? அதிர்ச்சிப் பின்னணி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது தொடர்பாக நம்மைத் தொடர்புகொண்ட தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், ‘எனக்கு தலைமையிடம் இருந்து அப்படி எந்த மெமோ கடிதமும் வரவில்லை’ என்று தெரிவித்தார்.
தொமுச மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் தொமுச தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது மாநில அரசின் உளவுத்துறை போலீசார் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். நாங்கள் என்ன ஏதென்று விசாரித்தோம். ‘தொமுச ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசுகிறீர்கள்? அடுத்த கட்டமாக போராட்டம் செய்ய இருக்கிறீர்களா?’ என்பது குறித்து விசாரிக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது சண்முகம் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், ‘ஏற்கனவே நமது தொழிற்சங்கத்தினர் கட்சியையும் தொழிற்சங்கத்தையும் பாடுபட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படக் கூடாது. இப்போது எதுவும் சிக்கல் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு கூட்டத்தை முடித்துவிட்டார்” என்கிறார்கள்.
திமுக தொழிற்சங்கத்தினருக்கும் திமுக தலைமைக்கும் இடையே உரசல் இருப்பது உண்மைதான்!
’தமிழ்நாட்டிற்கு ஆளுநரே தேவையில்லை’- திமுக மாணவரணி போராட்டம்!