குஜராத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த தேர்தல்களின் போது பதிவான வாக்குகளை விட குறைவாகும்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பா. ஜ. க வின் எஃகு கோட்டையாக உள்ளது. அங்கு தொடர்ந்து 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலிருந்து வருகிறது.
182 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விலைவாசி உயர்வு, மோர்பி பாலம் விபத்து, மும்முனைப்போட்டி என பல சவால்களுடன் இந்த தேர்தலை பா. ஜ. க எதிர்கொண்டது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா என முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.
அதுபோன்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இன்று நடைபெற்ற 89 தொகுதிகளிலும் காங்கிரசும் பாஜக வும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 88 இடங்களில் போட்டியிட்டது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. காலை 9 மணி நிலவரப்படி 4.62 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
11 மணி நிலவரப்படி 18.95 சதவீத வாக்குகள் பதிவாகின. 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
அதன்படி ஒட்டுமொத்தமாக இன்று 60.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த தேர்தல்களைக் காட்டிலும் குறைவு ஆகும். 2017 தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 66.75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
2012 டிசம்பர் 13 அன்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 70.75% வாக்குகள் பதிவாகின. அன்றைய தினம் முதல் மூன்று மணி நேரத்தில் 18 சதவீத வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகளும் மட்டுமே பதிவாகின.
மதியம் 3 மணிக்குள் இந்த எண்ணிக்கை 53 சதவீதமாக உயர்ந்து, 70.75 சதவீதத்துடன் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்தது.
சிறிது நேரத்திலேயே இவ்வளவு எண்ணிக்கை உயர்ந்தது பற்றி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனால் கடந்த காலங்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.
இந்நிலையில், சில வாக்குச் சாவடிகளிலிருந்து தரவுகள் பெறப்படவில்லை என்றும், இதில் தபால் வாக்குகள் இடம்பெறவில்லை என்றும் இந்த வாக்கு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுபோன்று இன்று நடைபெற்ற தேர்தலின் போது ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
பிரியா
சேவல் கூவுகிறது : புகார் கொடுத்த ‘மோடி’
“ஜல்லிக்கட்டு பாக்க வாங்க” : நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!