”தாமரை மலர்ந்தே தீரும்” : பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை உறுதி!
”தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்லும் 400 எம்.பி.க்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று (மார்ச் 20) பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார்.
அங்கு அவருக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கட்சி பொறுப்பில் தன்னை மீண்டும் உறுப்பினராக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைத்துக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
ஆண்டவரின் ஆசி; ஆள்பவரின் அனுமதி!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் தலைவராக இருந்து, பின்னர் ஆளுநராக பொறுப்பேற்று மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இன்று பாஜகவில் இணைந்துள்ளேன். அண்ணாமலை நான் கஷ்டமான முடிவை எடுத்துள்ளதாக கூறினார். கஷ்டமான முடிவுதான் என்றாலும் அதனை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். அதுதான் உண்மை.
தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்ல இருக்கும் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பாஜகவில் இணைந்துள்ளேன்.
இரண்டு ராஜ் பவன்களில் இருந்ததை விட, மக்கள் பவனான கமலாலயத்தில் இன்று இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆண்டவர் எனக்கு ஆசி கொடுத்தார். ஆண்டு கொண்டிருப்பவர் (மோடி) எனக்கு அனுமதி கொடுத்தார். அதனால் தான் இன்று கட்சியில் மீண்டும் இணைந்துள்ளேன்.
வாரிசு அரசியல் இல்லை!
ஆளுநர் பதவியை விட பாஜக உறுப்பினர் பதவி தான் எனக்கு பெரியது. எனது உழைப்பை முழுமையாக செலுத்தி மீண்டும் 3வது முறையாக மோடியை பிரதமராக்குவேன். தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.
கட்சி எந்த தொகுதியில் நிற்க சொல்கிறதோ. அந்த தொகுதியில் போட்டியிட உள்ளேன். மக்கள் பணி மீது விருப்பம் உள்ளதால், தேர்தலில் போட்டியிடலாம் என்று நினைக்கிறேன்.
வாரிசு அரசியல் என்பது தமிழக பாஜகவில் இல்லை. குமரி அனந்தன் என் தந்தையாக இருந்தாலும், எனது அரசியலில் அவருடைய செல்வாக்கை நான் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.
தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளோம். இந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெறுவோம்.” என்று தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.
பெரும் பலத்துடன் பாஜகவில் இணைந்துள்ளார்!
முன்னதாக அண்ணாமலை பேசுகையில், “நேற்று ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று கட்சியில் அதிகாரப்பூர்வமாக தமிழிசை இணைந்துள்ளார். ஆனால் மாற்றுக்கட்சி தலைவர்கள் நேற்று முதல் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்கிறேன். உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால், அங்கிருந்து நகர மாட்டீர்கள். ஆனால் நேற்றுவரை 2 மாநிலத்தின் முதல் குடிமகளாக இருந்த தமிழிசை, தேசிய அளவில் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட பாஜகவில் சாதாரண உறுப்பினராக இணைந்துள்ளார்.
அவர் சாதாரணமாக தற்போது பாஜகவில் இணையவில்லை. தெலுங்கானா போன்ற அசாதாரண அரசியல் சூழல் நிலவிய மாநிலத்தில் பணியாற்றிவிட்டு, மிகப்பெரும் நிர்வாக அனுபவத்துடன், பெரும் பலத்துடன் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன்” என்று அண்ணாமலை பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” : கிருஷ்ணசாமி
Suriya: இப்படி ஒரு படத்தை ‘மிஸ்’ பண்ணிட்டாரே… புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்!