ஆளுநர் உரையில் அதிகளவில் பொய்யான தகவல் : அண்ணாமலை

Published On:

| By christopher

தமிழக அரசு அளித்த உரையில் பொய்யான தகவல் என்று இருந்ததால் ஆளுநர் அவற்றை வாசிக்காமல் விட்டுவிட்டார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 11) பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டும் ஒன்று தான்

அதன்பின்னர் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ என்னை பொறுத்தவரை தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். நானே பலமுறை தமிழகம், தமிழ்நாடு என்று பேசியிருக்கிறேன்.

ஏன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் தமிழகம் என்று ஆளுநர் குறிப்பிட்டதில் எந்த தவறுமில்லை. அரசியலுக்காக திமுக இதை பெரிது படுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரை கூட தமிழில் தான் அவர் பேசியிருக்கிறார்” என்றார்.

தமிழகம் அமைதி பூங்கா அல்ல.

தொடர்ந்து, ”திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது என்று நாங்கள் போனதடவையே கூறியிருந்தோம். எனினும் ஆளுநர் திமுக கூறியதை தான் படித்தார். அதிலும் திமுக அரசை பாராட்டி தான் படித்தார். அது மரபு தான் என்றாலும் அதில் இருந்த கூற்றுகள் பலவற்றில் உண்மையில்லை.

ஆளுநர் அறிக்கையில் தமிழகம் அமைதி பூங்கா என்று குறிப்பிடப்பிட்டு இருந்தது . இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கா அல்ல. சென்னையில் ஒரு பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்.

lot of lies in governor speech annamalai

தமிழக அரசு அளித்த உரையில் பொய்யான தகவல் என்று இருந்ததால் ஆளுநர் அவற்றை வாசிக்காமல் விட்டுவிட்டார்.

தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமோ என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

கலைஞர் கூட பயன்படுத்தவில்லை

அதன்பின்னர், “பல இடங்களில் மத்திய அரசு மாநில அரசு சமூகமாக செயல்படுகின்றன. அரசு அதிகாரிகளை பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும் இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் இந்த வார்த்தையை பயன்படுத்தியதில்லை. திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை தான்.” என்று தெரிவித்தார்.

வாரிசு அரசியலை பாஜக எதிர்க்கும்

அதனை தொடர்ந்து, எனக்கு அஜித், விஜய் என இருவரையும் பிடிக்கும். நடிகர் அஜித் அவர்கள் எந்தவித உதவியும் இல்லாமல் தனது கடுமையான உழைப்பால் திறைத்துறையில் சாதித்துள்ளார். தனிமனிதனாக எந்த பேக்கப்பும் இல்லாமல் அஜித் செய்துள்ளது சாதாரண விசயமல்ல.

விஜய் அவர்களின் முதல் படத்தை எத்தனை பேர் பார்த்துள்ளோம். ஆனால் இன்று அவரது நடிப்பு பிரம்மாண்டமாக உள்ளது. அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றி வருகிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் இந்த வயதிலும் ரப்பர் மாதிரி நடனம் ஆடுவது அவ்வளவு சிறப்பாக உள்ளது.

தியேட்டருக்கு அதிகமாக செல்வது கிடையாது. எனினும் நேரம் கிடைக்கும்போது இருவரின் படத்தையும் நான் பார்ப்பேன்.

வாரிசை ஆதரிக்கிறோம். ஆனால் வாரிசு அரசியலை துணிவோடு பாஜக எதிர்க்கும்.” என்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆன்லைன் ரம்மி- 40 ஆவது தற்கொலை: ஆளுநருக்கு அப்பால் அன்புமணி புது யோசனை!

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share