திமுக பவள விழா : தொண்டர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

Published On:

| By christopher

"Looking forward to seeing you at the DMK coral function" : Stalin

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவையொட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி பவள விழா மற்றும் பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செப்டம்பர் 17) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

உங்களைக் காணக் காத்திருக்கிறேன்!

இந்த நிலையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” – எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்!

தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்!

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.

விழாவில் பெரியார், அண்ணா விருது, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் பெயரில் விருதுகளும், கட்சியில் சிறப்பாக பணியாற்றிய 16 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது. அதன்பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் திமுக தொண்டர்கள் 1 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாடு போன்ற பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த கல்லூரி மாணவர்கள்: ஒடிசாவில் பதற்றம்

நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு: என்ன காரணம்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share