பிடிஆர் ஆடியோ விவகாரம் திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்க என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முதல்வர் மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டனர் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது போல் ஆடியோ ஒன்று வெளியானது. அதைத்தொடர்ந்து பிடிஆர் பேசுவது போல் இரண்டாவது ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
இந்தசூழலில் விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாகவும், அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.
இந்நிலையில் சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்றல்ல இரண்டல்ல 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை குவித்திருக்கின்றனர். அதை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
நாம் சொல்ல வில்லை. ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற சாதாரண அமைச்சரல்ல நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதை அம்பலப்படுத்தியுள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் வாழ்க. இன்னும் பல கேசட்டுகள் வர வாய்ப்பிருக்கிறது.
எதாவது ஒரு அறிக்கைவிட்டால், உடனடியாக அறிக்கை விடும் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார். அப்படியானால் இது உண்மைதானே.
அந்த 30 ஆயிரம் கோடி ரூபாய் தடுமாறி கொண்டிருக்கிறது.
இதை கொண்டு மாவட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் கொடுங்கள். எல்லா மக்களும் வளம் பெறட்டும்.
ஒரு மனிதனுக்கு பணம் வேண்டியதுதான். அதற்கென்று இப்படியா? இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்கள்?,
இவர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை. 30 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு திமுகவினர் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் ஆர்.எஸ்.பாரதி அழகாகப் பேசுவார். அவர் அப்படி, இவர் இப்படி என்பார். இந்த விவகாரத்தில் அவர் ஏன் வாயை திறக்கவில்லை.
மடியில் கனம் இருப்பதால் அவர்களால் பேசமுடியவில்லை. எதாவது பேசி இந்த பணம் இங்குதான் இருக்கிறது என்று குட்டையை உடைத்துவிட்டால் தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள் என்பதால் பேசாமல் இருக்கிறார்கள்.
ஆனால் திமுகவினர் மீது அதிமுகவினர் எதாவது சொன்னால் மட்டும் அவர்கள் மீது வழக்குப்போட்டு விடுவார்கள் என திமுகவினரை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… உள்ளே, வெளியே யார் யார்?
ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்: தமிழக வரி எவ்வளவு?