ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மோடி பெயர் குறித்துப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று (மார்ச் 26) நாடு முழுவதும் உள்ள காந்தி சிலை மற்றும் காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 26) லண்டனில் உள்ள இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, நாடாளுமன்றத்திற்கு எதிரானது என்று கூறி லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்குப் பிறகு பேசிய இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் கமல் தலிவால்,
““ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது, நீங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது பாஜகவிற்கோ எதிராகச் சென்றால் எதுவும் நடக்கலாம் என்று மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
மேலும் அதானி விவகாரத்தில் இருந்து தேசத்தை திருப்பும் செயல்” என்று கூறினார்.
மோனிஷா
பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலம்: முக்கிய அறிவிப்பு!
ராகுல் தகுதிநீக்கம்: சட்டமன்றத்தில் காங்கிரஸ் இன்று உள்ளிருப்பு போராட்டம்!