Tr Baalu argument with L Murugan

மத்திய அமைச்சராக இருக்க எல்.முருகனுக்கு தகுதியில்லை: டி.ஆர்.பாலு ஆவேசம்!

அரசியல்

தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஏன் விடுவிக்கவில்லை என்று மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியபோது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Tr Baalu argument with L Murugan

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி விடுவிக்காதது குறித்து தமிழக எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர்.

அவை நடவடிக்கைகள் துவங்கியதும் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா,  “கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

அதேபோல, டிசம்பர் மூன்றாவது வாரம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது.

திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது அதிமுக அரசாங்கத்தின் 5 லட்சம் கோடி கடன்சுமை மற்றும் கொரோனா பேரிடரை எதிர்கொண்டோம். இருப்பினும் திறமையாக ஆட்சி செய்து நிதிநிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளுக்காக ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்தோம்.

மத்தியக்குழு தமிழகம் வந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துவிட்டது. அதேபோல தமிழக அரசும் வெள்ள சேதம் குறித்த அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வெள்ள நிவாரணம் ஏன் இன்னும் விடுவிக்கவில்லை? எப்போது வெள்ள நிவாரண நிதியை விடுவிக்கப் போகிறீர்கள்?

வெள்ள நிவாரண நிதி விடுவிக்கும்போது, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கியதை போல நிவாரணம் ஒதுக்குவார்களா?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிடம் மத்திய பாஜக அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநில பேரிடர் நிதி என்பது மாநில அரசு ஒதுக்கும் நிதியாகும். அனைத்து மாநிலங்களுக்கும் வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதில், மத்திய அரசு சரிசமமாக நடத்த வேண்டும்” என்று ஆ.ராசா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் வானிலையை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய கருவிகள் இல்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து சரியாக கணிக்கவில்லை. அதிகனமழையால் 1000 பயணிகள் ரயிலில் சிக்கி தவித்தனர். 2 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்” என்று பேசினார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும். தயவுசெய்து உட்காருங்கள். முதலில் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்க உங்களுக்கு தகுதியில்லை” என்று தெரிவித்தார்.

”ஒரு தலித் அமைச்சரைப் பார்த்து மத்திய அமைச்சராக பதவி வகிக்க தகுதி இல்லை என்று டி.ஆர்.பாலு எப்படி சொல்ல முடியும்?” என்று பாஜக எம்.பி-க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்.பி, “பாஜக உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கினேன். எல்.முருகன் அரசியலில் இருக்கவும் தகுதி இல்லாவதவர்” என்று காட்டமாக பேசியதை தொடர்ந்து திமுக எம்.பி-க்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் குறித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்லாமிய கைதிகளோடு ஆர்.எஸ்.எஸ்.கைதிகளும் விடுதலை: ஆளுநரின் பக்கா பிளான்! 

சென்னை திரும்பும் முதல்வர்: குவியும் திமுக நிர்வாகிகள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *