மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குனில் சுரேஷும் இன்று (ஜூன் 25) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கியது. தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக சபாநாயகர் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை குறுகிய காலத்திற்கு தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்றும் இன்றும், புதிய எம்.பிகள் மக்களவையில் பதவியேற்று வருகின்றனர்.
சபாநாயகர் தேர்தலில் திருப்பம்!
இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தேர்தலில் வழக்கம்போல் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக 8-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் இந்தியா கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
போட்டி ஏன்?
முன்னதாக மக்களவை சபாநாயகர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை மத்திய அரசு நியமித்தது. அதன்படி ராஜ்நாத் சிங் நேற்றிரவு இந்தியா கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், சபாநாயகர் பதவிக்கான என்டிஏ வேட்பாளரை ஆதரிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரியதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இந்தியா கூட்டணி சார்பில் தற்போது வேட்பாளராக கே.சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் இதுவே முதன்முறை!
பொதுவாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கு ஆளும்கட்சியை சேர்ந்த அல்லது அவர்களின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் இதுவரை மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்ததில்லை.
ஆனால் இந்த முறை எதிர்க்கட்சி சார்பில் போட்டி வேட்பாளர் களமிறக்கப்பட்டதன் மூலம், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சனாதன பேச்சு : உதயநிதிக்கு ஜாமீன் வழங்கிய பெங்களூரு கோர்ட்டு!
”லாரா மட்டுமே எங்களை நம்பினார்“ : ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம்!