சேலத்தில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டு தியானம் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அதிமுக தோல்வி அடையும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டி கோவில் கோவிலாக சென்று வருகின்றனர்.
அந்தவகையில், இன்று காலை பாஜக சார்பில் போட்டியிட்ட தனது மனைவி ராதிகா வெற்றி பெற விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு செய்த நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கருவறையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் முருகனை தரிசனம் செய்த அவர், பின்னர் வெள்ளி வேலுடன் சன்னதியை சுற்றி வந்தார்.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர் எடப்பாடியார்.
pic.twitter.com/0Oyie5tRPc— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) June 3, 2024
தொடர்ந்து அங்குள்ள தியான மைய இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பிறகு, அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சுமார் 15 நிமிடங்கள் வரை அவர் தியானம் செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 30-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி 45 மணி நேரம் விவேகானந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.
இந்நிலையில், அவரது பாணியில் எடப்பாடி பழனிசாமி தியானம் செய்தாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை… ஆராதனா, குகன் ஹேப்பி!
வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் : ஸ்டாலின்