“மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல், மே மாதங்களில்தான் வரும் என்று நினைத்திருக்க வேண்டாம், முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே திமுகவினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்” என்று அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த ஆண்டு முழுதும் திமுக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூலை 1 ஆம் தேதி இரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார் டி.ஆர்.பாலு.
அப்போது பேசிய அவர், “நம்முடைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் கூட்டணி மாடலைதான் இன்று இந்தியாவே பின்பற்றுகிறது. 2018 ஆம் ஆம் ஆண்டு பத்து கட்சிகளோடு கூட்டணியாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து 60% வெற்றி பெற்றோம். 2019 இலே நம் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்றோம். 2021 சட்டமன்ற தேர்தலிலே இதே கூட்டணியாக நின்று நமது தலைவரை முதல்வராக ஆக்கினோம். இதுபோலவே இப்போது இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகளை சிந்தாமல் சிதறாமல் ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து வெற்றியை பெற நமது தலைவரே வழிகாட்டுகிறார்.
பாட்னாவில் புலியையும் மானையும் ஒரே கூட்டத்தில் கலந்துகொள்ள வைத்து இந்தியாவின் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்கிறார் நமது தலைவர் ஸ்டாலின். தமிழ்நாட்டின் 40 தொகுதிகள் மட்டுமல்ல, நாடே நமது தலைவர் ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. இந்த ஒற்றுமை உணர்வை இந்திய அளவில் ஏற்படுத்தியவர் ஸ்டாலின் தான். அதனால்தான் நமது தலைவர் ஸ்டாலினைப் பார்த்து மோடியும் மிரள்கிறார், அமித் ஷாவும் மிரள்கிறார். அமித் ஷா இது ஒரு போட்டோ ஷூட் என்கிறார். மோடியோ திமுகவைப் பற்றி விமர்சிக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திறமை ஸ்டாலினிடம் இருப்பதால்தான் அவர் டார்கெட் செய்யப்படுகிறார். அவரோடு இருப்பவர்கள் டார்கெட் செய்யப்படுகிறார்கள்.
தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதம்தான் வரும் என்று நினைக்காதீர்கள். ஏமாந்துவிடாதீர்கள். தேர்தலை அவர்கள் அட்வான்ஸ் செய்ய நினைக்கிறார்கள். இல்லையென்றால் அமெரிக்காவில் இருந்து வந்த உடனேயே அவசர அவசரமாக மோடி ஏன் மத்தியப் பிரதேசம் செல்ல வேண்டும்? அனேகமாக டிசம்பரிலேயே கூட மக்களவைத் தேர்தல் வரலாம். எனவே தேர்தல் வேலைகளை இப்போதில் இருந்தே நாம் அனைவரும் செய்ய வேண்டும்.
குறிப்பாக கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் என்ன சொல்கிறாரோ அதன்படியே பணியாற்ற வேண்டும். மாவட்டச் செயலாளருடன் கூட ஓட முடியவில்லை என்றாலும் வேகமாக நடந்தாவது செல்லுங்கள். நாம் நாற்பது இடங்களையும் பெற்றுத் தந்தால்தான் மத்திய அரசை பற்றி சிந்திக்கலாம்” என்று பேசினார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு.
வேந்தன்