குஜராத் ரிசல்ட்டை பொறுத்தே மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 1) ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில்  காலை 10.30 க்கு தொடங்கியது.

திமுகவின் தற்போதைய அமைப்பின்படி 71 மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மேடையில் இருக்க வேண்டியவர்களில் முக்கியமானவரான துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி சென்று இருப்பதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  

காலை 10:30 மணிக்கு தொடங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பகல் 12. 30 வரை நீடித்தது.

திமுகவின் மூத்த முன்னோடியும் அக்கட்சியின்  மறைந்த பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்க தான் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று முரசொலியிலேயே அறிவிக்கப்பட்டது.

அதன்படியே கூட்டம் தொடங்கியதும் டி. கே.எஸ். இளங்கோவன் இந்த அஜண்டா தொடர்பான இரண்டு தீர்மானங்களை வாசித்தார். 

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில்  அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனின் சிலையை திறந்து வைத்து,

அந்த வளாகத்திற்கு அன்பழகன் மாளிகை என்று பெயரிட்டும் தற்போது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் சிலை நிறுவி அந்த வளாகத்தின் பெயரையும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவது தீர்மானமாக பேராசிரியர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்றும் வரும் டிசம்பர் 17ஆம் தேதி போற்றும் கவியரங்கம் 18 ஆம் தேதி வட சென்னையில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Lok Sabha election depends on Gujarat Result Stalins prediction

இதையடுத்து புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே புதிய மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். அதன் பிறகு அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வகையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராணிப்பேட்டை காந்தி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம் எ.வ. வேலு கே.என்.நேரு செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினார்கள். தாங்கள் பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது… “நமக்கு அஸ்திவாரங்களாகவும் முன்னோடிகளாகவும் இருக்கும் நீதி கட்சி தலைவர்களை இன்றும் மறக்காமல் நாம் போற்றி வருகிறோம்.

அதனால்தான் திமுக வலுவாக இருக்கிறது. வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கேட்ட கோழைகளை நாம் கொண்டாடவில்லை. போராட்டங்கள் நடத்தி உரிமைகளை வென்றெடுத்த வீரர்களைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.

கலைஞர் என்றைக்கும் மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுத்தவர். அவரைப் போலவே நம்முடைய தலைவர் தளபதியும் இயக்கத்துக்காக உழைத்த பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் மூலம் பெருமை சேர்க்கிறார்” என்று சொல்லிவிட்டு வரும் மக்களவைத் தேர்தல் பற்றிய சில விஷயங்களை குறிப்பிட்டார்.

“நம்முடைய எதிரிகள் பலமற்றவர்களாகவே இருந்தால் கூட நாம் அவர்கள் பலசாலியாக இருந்தால் எப்படி எதிர்ப்போமோ அந்த வேகத்தில் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் நமது எதிர்ப்பில் வேகம் இருக்கும்.

எதிரிக்கு பலம் இல்லை என்று அதே நினைப்பில் நாம் இருந்தால் நம்முடைய வேகம் குறைந்துவிடும், அதனால் நம்முடைய எதிரிகள் உண்மையிலேயே பலவீனமாக இருந்தால் கூட அவர்களை எதிர்ப்பதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும்” என்று பேசினார் துரைமுருகன். அண்மையில் வேலூரில் பேசிய துரைமுருகன், ‘பிசாசு போல பிஜேபி உருவெடுத்து வருகிறது’ என்ற பேசிய பேச்சுக்கு விளக்கம் அளிப்பது போல இருந்தது துரைமுருகனின் மாசெக்கள் கூட்டப் பேச்சு.

நிறைவாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உரையாற்றினார்.

” பொதுக்குழு முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருக்கிறீர்கள். பல்வேறு அணிகளுக்கான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் முதல் ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் வரை முழுமையாக நியமிக்கப்பட வேண்டும்.

அதிலும் குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய நான்கு அணிகளிலும் ஒவ்வொரு பூத் அமைப்புக்கள் வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் முழுமையாக நியமிக்க வேண்டும்.  நமது அணிகளின் செயல்பாடுகளுக்கு மாவட்ட செயலாளர் முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

திமுகவின் அனைத்து நிர்வாகிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 15 லட்சம் நிர்வாகிகள் இருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரும் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றிக்கு பாடுபட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் நாமே கைப்பற்ற வேண்டும்.

பேராசிரியர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்த கையோடு அடுத்த ஜூன் மூன்றாம் தேதி முதல் நாம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட போகிறோம்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நாம் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை அடைய வேண்டும்” என்று பேசினார் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் தலைமை கழக நிர்வாகிகளோடு சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அப்போது குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டிருப்பதை பற்றிய பேச்சு வந்திருக்கிறது. வாக்கு சதவிகிதம் எத்தனை என்றும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்போது சீனியர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் பேசும்போது, ‘குஜராத் மாநில தேர்தல் முடிவுகள்தான், வரும் நாடாளுமன்ற தேர்தல் 2023 இல் வருமா அல்லது 2024 இல் வருமா என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

ஒருவேளை பாஜக குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமானால் இதையே காரணமாக வைத்து 2023 நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்த மோடி தயாராகி விடுவார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள எவருக்கும் முன்பு நாம் தயாராகி விட வேண்டும்”  என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

-ஆரா

குஜராத்தில் குறைந்த வாக்குப்பதிவு!

லிஃப்டில் சிக்கிய அமைச்சர்: பொறியாளர்கள் பணி நீக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts