விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை பரிமாற வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர்,
“தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் 880 வேளாண் விரிவாக்கம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்ட பலன்கள் சென்று சேரும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து பயன்களும் பெற விவசாயிகள் மின்னணு முறையில் விண்ணப்பிக்க தேவை உள்ளது.
இதன்பொருட்டு விவசாயி சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள உதவும் வகையில்,
385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும்.
இக்குழுவில் அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.
இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குனரும் தோட்டக்கலை உதவி இயக்குனரும் செயல்படுவார்கள்.
வட்டாரக் குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும்.
இதில், மாநில அளவில் செயலாற்றும் விளம்பர பிரிவு, மாவட்டத்திற்குரிய தகவல்களை குறுஞ்செய்தி, குரல்வழிச் செய்தி, குரல்வழி அறிவிப்பு, மின்னணு விளம்பரம் வாயிலாக மாவட்ட குழுவிற்கு அனுப்பி வைக்கும்.
இத்தகவல்களை உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் குழுவிற்கு அனுப்பப்பட்டு அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல்களை தெரிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
பண்ருட்டி பலா, மதுரை செங்கரும்புக்கு புவிசார் குறியீடு!
வேளாண் பட்ஜெட்: அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!
Useful and correct idea