தவறு செய்யவில்லை என்றால் பொன்முடி நிரூபிக்கட்டும்: ஜெயக்குமார்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 17) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தவறு செய்யவில்லை என்றால் அமைச்சர் பொன்முடி நிரூபிக்கட்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “செம்மண் வழக்கில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்து வரும் இந்த சோதனையை வரவேற்கிறேன்” என்றார்.
அப்போது அவரிடம், அமலாக்கத்துறையினரின் இது போன்ற நடவடிக்கைகள் ஏன் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட வில்லை என்று திமுகவினர் கூறுகின்றனரே என்று கேள்வி எழுப்பப்பட்டது,
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார். “முகாந்திரம் இல்லாமல் அதிமுக அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று திமுகவினர் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது.
அமலாக்கத்துறையை பொறுத்த வரை அவர்களிடம் முகாந்திரம் இருப்பதால் தான் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தவறு செய்யவில்லை என்றால் அமைச்சர் பொன்முடி நிரூபிக்கட்டும் ” என்று கூறினார்.
மேலும், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம .சீனிவாசன் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “அமைச்சர் பொன்முடி இந்த சோதனைக்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்” என்றார்.
அப்போது அவரிடம் இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனரே என்று கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதிலளித்த சீனிவாசன், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக அமைச்சர்கள் மீது சொத்துகுவிப்பு வழக்கு என்று ரைய்டு நடத்தியது எந்த நோக்கத்தில் அதை செய்தது? அது அரசியல் பழிவாங்குதல் இல்லையா” என்று கேள்வி எழுப்பினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால், ஆசிரியர்களின் சம்பளம் கட்!