இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்: அரச மரபை மாற்றி பதவியேற்பு விழா!

Published On:

| By Kalai

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தமுறை அரச மரபை மீறி பிரதமர் நியமன விழா நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி அவர் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவர் என்பது இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள விதி. அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். வாக்கு பதிவு கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்திய நேரப்படி திங்கட்கிழமை(இன்று) வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரதமர் தேர்தலில் லிஸ்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சான் நாளை(செவ்வாய்க்கிழமை) ஸ்காட்லாந்துக்கு சென்று அங்கு விடுமுறையை கழித்து வரும் ராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவை அறிவிப்பார். அதன் பின்னர் லிஸ் டிரஸ் ராணியை சந்தித்து புதிய அரசை அமைக்க அனுமதி கோரவுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இங்கிலாந்து அரச பாரம்பரிய நடைமுறைகளின்படி புதிய பிரதமர்பதவியேற்பு விழா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் ராணி எலிசபெத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரச மரபை உடைத்து ஸ்காட்லாந்தில் இந்த விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel