அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று (ஜூன் 9) பாஜகவில் இணைந்தார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த நேரத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், அவரது அணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதல் எதிரொலியாக தனது ஆதரவை ஈபிஎஸ் பக்கம் திருப்பி இருந்தார் மைத்ரேயன், ஆனால் அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் தரப்படாத நிலையில் அதிருப்தி காரணமாக ஓபிஎஸை சந்தித்தார்.
இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளித்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து சிலகாலமாக ஒதுங்கி இருந்தவர் இன்று டெல்லியில் சிடி ரவி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்துள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க என்று ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
அப்போது, “சென்னை வரும் அமித்ஷாவிடம் மேகதாது விவகாரம் தொடர்பாக பேசுவீர்களா” என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ”மேகதாது விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது என்பதுதான் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது” என கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு, ”ஒடிசா ரயில் விபத்து மனித உள்ளங்களை நொறுக்கி கசக்கி பிழிவதாக உள்ளது; இதற்கு உலக நாடுகளே வருத்தம் தெரிவித்துள்ளது” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்
தென்னிந்திய ரசிகர்களுக்கு ஷாகித் கபூரின் கோரிக்கை!