சிறப்புப் பத்தி: ட்ரினிடாடின் இலக்கியக் குரல்

Published On:

| By Balaji

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

காலனியத்துக்கு ஆதரவாகச் சமகாலத்தில் குரல் எழுப்பிவருகிற பிரிட்டனின் அறிவுஜீவுகளைப் பற்றிப் போன வாரத்தில் பார்த்தோம். தாராள அல்லது முற்போக்குவாதிகளோ பிரிட்டனின் பன்மைத்தனத்திற்குக் காலனிய வரலாறும் ஒரு காரணம் என நிறுவுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற காலனிய சாம்ராஜ்ஜியங்களில் மற்ற இனத்தினர் குடியேறியதில் காலனியத்தின் பங்கு முக்கியமானது. அதே சமயத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களோ மிகுந்த இடர்ப்பாடுடனே இருந்துவந்துள்ளன என்பதையும் மறுக்க இயலாது.

ட்ரினிடாட், டொபெகோ போன்ற தீவுகளிலிருந்து வந்த வின்ட்ரஷின் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, பிரிட்டிஷ் பதி அல்லது அப்போது வந்த செய்தித்தாள்களில் வந்த விவரணைகள் காலனியத்தை ஏதோ ஒருவகையில் ‘அங்கீகரிப்பதாகவே’ இருக்கின்றன. ஆனால், 1950களில் ட்ரினிடாடிலிருந்து வந்த குடியேறிகளே தங்களது வாழ்வனுபவத்தை எழுத ஆரம்பிக்கின்றனர். இவர்களின் பதிவு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

Literary voice of Trinidad - Murali Shanmugavelan

1950களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேற்கு ஆப்பிரிக்க, ட்ரினிடாட் இலக்கிய இயக்கத்தின் முன்னோடி சாம் செல்வன் (Sam Selvon) என்ற ஒரு ட்ரினிடாடியத் தமிழர். ட்ரினிடாட் இலக்கிய உலகத்தைப் பற்றிப் பேசும்போதும், இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்தியர்களின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றிப் பேசும்போதும் வி.எஸ்.நைபாலை உயர்த்திப் பிடிக்கும் இந்(து)திய இலக்கிய உலகில் சாம் செல்வன் இன்று வரை ஓர் இளைத்த பிள்ளையாகவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். பலருக்கும் செல்வனைத் தெரியாது என்பதே கசப்பான உண்மை. ஆனாலும், சாம் செல்வனின் கரீபியக் கறுப்பு இலக்கியப் பணி மகத்தானது.

சாம் செல்வனின் முழுப்பெயர் சாமுவேல் டிக்ஸன் செல்வன். செல்வனின் தந்தை அன்றைய மெட்ராஸ்வாசி. கிறிஸ்துவர். செல்வனின் தாய் ஆங்கிலோ இந்தியர். செல்வனின் தாய்வழிப் பாட்டி ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். தாய்வழித் தாத்தா தமிழர். இங்கே ஒரு குறிப்பை இடைச்செருகுதல் அவசியம்.

தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், சீஷெய்ல்ஸ், ட்ரினிடாட் போன்ற தீவுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகக் கப்பலில் ‘ஏற்றப்பட்ட’ பெரும்பான்மையான தமிழர்கள் கடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது ஆதி திராவிடர்களாகவோ (இன்றைய தலித்) இருந்துள்ளனர் என்பது வரலாற்று ஆவணம். இவர்களில் பலரும் தங்களின் சாதி அடையாளங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, தாங்கள் வாழும் சமுதாயத்தோடு முற்றிலும் இணக்கமாகி வாழ்ந்துவருகின்றனர். டர்பனில் உள்ள தமிழர்களும் இப்படியே. மொரிஷியஸ், சீஷய்ல்ஸ் போன்ற இடங்களுக்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்கள் எல்லாம் உள்ளூர் சமுதாயத்தோடு இயைந்து இணக்கமாகியுள்ளனர். இதற்கு மாற்றாக, இங்கு சென்ற குஜராத்திகள் எல்லாம் தங்களது மத, சாதி அடையாளங்களை விடாமல் கெட்டியாகப் பிடித்துள்ளனர் என்பதை மிக முக்கியமான ஒரு கூறாக நான் பார்க்கிறேன். உதாரணமாக, டர்பனில் இந்திய வம்சாவளிகளை மூன்று கூறாகப் பிரித்துள்ளனர்: தமிழர்கள், இந்துக்கள் (குஜராத்திகள், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றும் முஸ்லிம்கள் (மலபார் பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்). குஜராத்திகளைப் போல அல்லாமல் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்கள் தங்களுடைய ‘தாய் நாட்டு’ உறவைக் கடந்து தாங்கள் சென்ற தேசத்தின் குழந்தைகளாகவே மாறிவிட்டனர். குஜராத்தி இந்துக்கள் அப்படிக் கிடையாது.

செல்வனுக்குப் பின் பிறந்து, பிரிட்டனுக்கு வந்த வி.எஸ்.நைபாலுக்குத் தன் சாதி, மத அடையாளம் மிக முக்கியமானதாகவே இருந்திருக்கிறது. மும்பையில் உள்ள தலித் சிறுத்தை அமைப்பின் நிறுவனரான நமிதோ தாசலின் வீட்டுக்குச் சென்றபோது, அவருடைய வீட்டில் தான் சாப்பிட மறுத்ததை நைபால் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Literary voice of Trinidad - Murali Shanmugavelan

நைபாலுக்கும் செல்வனுக்கும் உள்ள மற்றொரு முக்கியமான இலக்கிய வேறுபாடு என்னவெனில் ஆங்கில மொழி நடை. நைபாலைப் போலவே, செல்வனும் ஆரம்ப காலத்தில் உயர் மொழி நடைகளைப் பயன்படுத்தித் தான் சார்ந்த சமுதாயத்தின் வாழ்வியலை இலக்கியமாகப் படைக்க முயற்சி செய்தார். அம்முயற்சியின் போலித்தனம் அலுக்கவே, தன் நாட்டு மக்கள் பேசும் உடைந்த உள்ளூர் ஆங்கிலத்தை வைத்தே தனது பிரதிகளை எழுத ஆரம்பித்தார். பின்னாளில் ‘நாட்டு மொழி’ (Creolised English) இலக்கியம் என்ற ஓர் இலக்கிய வகையை ஆரம்பித்துவைத்தார். காலனிய நிறுவனங்களின் மொழித்தன்மை ஆளுமையை நிராகரித்து உழைக்கும் கறுப்பின் மக்களின் ஆங்கிலப் பேச்சு வடிவத்தை பிரிட்டனில் இலக்கியமாகப் படைத்தார்.

தமிழ் தந்தைக்கும், ‘ஆங்கிலோ தமிழருக்கும்’ பிறந்த செல்வனின் குடும்பம் ட்ரினிடாடில் ஒரு வந்தேறிக் குடும்பம். ட்ரினிடாடில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய செல்வன் 1950ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலைபார்க்க வருகிறார். ஆக செல்வன், பிரிட்டனுக்கு ‘பிழைக்க வந்த’ விண்ட்ரஷின் குழந்தை கிடையாது. தூதரகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, எழுத்துப் பணியில் ஈடுபட்டுவந்தார். லண்டனில் மேற்கு ஆப்பிரிக்க இலக்கியச் சங்கத்தையும் ஆரம்பித்தார். இதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்க இலக்கிய ஆர்வலர்களை லண்டனில் அவ்வப்போது அழைத்து, கறுப்பு இலக்கிய உரையாடல்கள் பிரிட்டனில் தொடங்கக் காரணமாக இருந்தார்.

Literary voice of Trinidad - Murali Shanmugavelan

செல்வன் தொடர்ச்சியாகப் புத்தகங்களும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வந்தாலும் அவர் எழுதிய ‘லோன்லி லண்டனர்ஸ்’ (யாருமற்ற லண்டன்வாசிகள்) என்ற பிரதி மிக முக்கியமானதாக இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிறது. லோன்லி லண்டனர்ஸ் பிரிட்டனில் வாழும் உழைக்கும் கறுப்பினத்தைப் பற்றிய, அவர்களின் ‘நாட்டு நடையில்’ எழுதப்பட்டமுதல் பிரதி.

தன்னுடைய பொருளாதார நிலை விண்ட்ரஷ் சந்ததியினரைவிடச் சற்று வளமாக இருந்தபோதிலும், செல்வனினால் மேற்கு ஆப்பிரிக்க சகோதர சகோதரிகளின் பிரச்சினையைத் துல்லியமாக உணர முடிந்தது. லோன்லி லண்டனர்ஸில் வரும் பாத்திரங்கள் யாவரும் புனிதர்கள் கிடையாது. மனைவியைத் துன்புறுத்துபவன், போதைக்கு அடிமையானவன், குடிகாரன், பெண் பித்தன், குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத ‘ஆண்’ என்ற கறுப்பர்களின் மீது வெள்ளைக்காரர்கள் கட்டிய பிம்பத்தின் மேல் விண்ட்ரஷ் சந்ததியினரின் அன்றாட வாழ்வா – சாவா போராட்டத்தையும், அதையும் தாண்டி அவர்களுக்கு உள்ளே இருக்கும் மனிதத்தையும் லோன்லி லண்டனர்ஸ் முன்னிறுத்துகிறது.

மேற்கு ஆப்பிரிக்கச் சந்ததியினர் லண்டனில் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; அவர்களின் தனிமை எவ்வளவு கொடூரமானது என்பதையும் செல்வன் முகத்தில் அறைந்தாற்போலச் சொல்கிறார். லண்டன் போன்ற நகரத்தில் ‘தங்களைப் போன்றோர்’ எப்படி உபயோகப்படுத்தப்படுகின்றனர் என்பதையும்சொல்கிறார். லண்டனின் பளபளப்பும் அவற்றின் வசீகரமுமே முக்கியம்; அவற்றுக்கு முன் இவர்களின் உழைப்பும் வாழ்வும் ஒரு பொருட்டே இல்லை.

கதையில் காலகாத் (Galahad) மேற்கு ஆப்பிரிக்கக் கறுப்பன். வேலை இல்லாமல் பசியுடன் இருக்கிறான். வேறு வழியில்லாமல் கென்ஸிங்டன் ரோட்டில் உள்ள (பணக்காரர்கள் வசிக்கும் பகுதி) ஒரு பூங்காவில் திரியும் புறாவை அடித்துச் சாப்பிடலாம் என்ற முடிவுடன் புறாவை வேட்டையாட முற்படுகிறான். அங்கிருந்த வயதான வெள்ளை மூதாட்டி ஒருவர் அதைத் தடுப்பது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் போலீஸிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்ட, காலகாத் அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறான். பின்னர் தனது நண்பன் மோசஸிடம் இச்சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அதற்கு மோசஸ் “இது என்ன ட்ரினிடாட் என்று நினைத்தாயா? புறா சாப்பிடுவதற்கு அல்ல. பூங்காக்களை அழகுபடுத்துவதற்கு. இங்குள்ள ஒரு ஈயைக்கூட நம்மால் தொட முடியாது” என்று கூறுகிறான்.

ஆனால்,சட்டப்படி மேற்கு ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் பிரிட்டனின் பிரஜைகள். சாமானிய வெள்ளையர்களின் பார்வையில், அவர்கள் இங்குள்ள கலாச்சாரத்தைக் குலைக்க வந்தவர்கள். முற்போக்குவாதிகளுக்கோ காலனியத்தில் விளைந்த பன்மைத்தன்மை. வியாபாரிகளுக்கு, குறைவாக ஊதியம் பெற்று மாடாய் உழைக்கும் கூலியாட்கள். ஆனால், செல்வனுக்கும் அவரது சக ட்ரினிடாட் தோழர்களுக்குமான உண்மை நிலை: இங்குள்ள ஒரு ஈயைக்கூட நம்மால் தொட முடியாது.

அடுத்த வாரம் பிரிட்டனில் உள்ள சமகால நிறப் பிரச்சினையை கவனப்படுத்திய மற்றொரு தமிழரைப் பற்றி பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Literary voice of Trinidad - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]

கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]

கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]

கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share