கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்துக்கு செய்த சிறப்புத் திட்டங்களை பட்டியல் போட்டு சொல்ல முடியுமா என்று மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) பங்கேற்று பேசினார்.
இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருக்கும் நிலையில், அவருக்கு கேள்வி எழுப்பி பேசிய மு.க.ஸ்டாலின், “இரண்டு நாட்களாக பத்திரிகைகளில், ஒன்றிய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வருகிறார். பாஜக பொதுக்கூட்டத்தில் நாளை பேச உள்ளார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதை காட்டுகிறது.
அமித்ஷா நாளை பேசும் போது இந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு செய்திருக்கக் கூடிய சிறப்புத் திட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தோம் என பட்டியல் போட அமித் ஷா தயாராக இருக்கிறாரா?.
இதே திமுக 2004 முதல் 2014 வரை ஒன்றிய அளவில் காங்கிரஸுடம் மத்தியில் கூட்டணியில் இருந்தது. அப்போது சென்னைக்கு மெட்ரோ கொண்டு வரப்பட்டது. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் தொடங்கப்பட்டு 80 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்திய அரசு செலவு செய்த திட்ட செலவுகளில் 11 சதவிகிதம் தமிழ்நாட்டுக்காக கொண்டு வந்தோம். 69 திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி காட்டினோம்” என அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டுக்காக இவர்கள் பெரிய திட்டத்தை அறிவித்தார்கள். அது என்ன திட்டம் தெரியுமா? மதுரை எய்ம்ஸ். 2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அவர் மறைந்துவிட்டார்.
அறிவித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கட்டவில்லை. ஒரு மருத்துவமனையை தமிழ்நாட்டில் கட்ட 1000 கோடி ரூபாயை ஒதுக்க மனமில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை பணியை ஏன் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும். ஒரு முதல்வராக நான் இதை எதிர்பார்க்கவில்லை. மக்கள் சார்பாக கேட்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “தமிழகத்துக்கு இவர்கள் செய்தது என்ன தெரியுமா? இந்தி திணிப்பு. பேரிடர் கால நிதிகூட ஒதுக்கவில்லை. ஆனால் சோழர் காலத்து செங்கோலை வைத்திருக்கிறோம் என்று சொல்வார்கள், அந்த வரலாறுதான் என்னவென்று தெரியுமே?
காசியில் தமிழ்சங்கத்தை நடத்திவிட்டோம், பாரதியார் பாடல், திருக்குறளை மேற்கோள் காட்டுகிறோம் என்று சொல்லி எங்களுக்கு வாக்களியுங்கள் என வரப்போகிறதா பாஜக?. கொத்தடிமை அதிமுகவை நம்பி வந்திருக்கிறது பாஜக” என்று கடுமையாக விமர்சித்தார்.
பிரியா
’தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் அடுத்த அப்டேட்!