வைஃபை ஆன் செய்ததும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவாலயத்தில் வைத்துக் கொடுத்த பிரஸ்மீட் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளை மறு ஆய்வு செய்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக நேற்று டிஜிட்டல் திண்ணையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நடத்திய ஆலோசனை பற்றி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆகஸ்டு 24 ஆம் தேதி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறார்.
இதற்காக அறிவாலயம் சென்றுவந்தபோதுதான் இன்னொரு பரபரப்புத் தகவலும் கிடைத்தது. அதாவது வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான எம்.பி. வேட்பாளர்கள் பற்றிய முதல்கட்ட பட்டியல் தயாரிக்கும் பணியில் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டத் தொடங்கிவிட்டார் என்பதுதான் அந்த தகவல்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த திமுக உட்கட்சித் தேர்தலில் இளைஞரணியைச் சேர்ந்த சிலருக்கு மாவட்டச் செயலாளர்கள் பதவி வழங்க வேண்டும் என்று தனது தந்தையும் தலைவருமான ஸ்டாலினிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தார்.
ஆனால் சீனியர்கள் பலரும் மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று ஸ்டாலினிடம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து… கடைசிகட்டமாய் கண்ணீர் சிந்தி கூட மாவட்டச் செயலாளர் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டனர். இதனால் உதயநிதியால் இளைஞரணி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் ஆக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவிக்கான தேர்வில் அமைச்சரின் வாரிசுகளோ, அமைச்சர்களின் சிபாரிசுகளோ இடம்பெறாத வகையில் கவனமாக கையாண்டார் உதயநிதி.
இதற்கு அடுத்த கட்டமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான பூர்வாங்க பணிகளைத் தொடங்கிவிட்டார் உதய நிதி ஸ்டாலின். இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பம் தெரிவித்த தங்களது நெருக்கமான பிரமுகர்கள் அடங்கிய பூர்வாங்க பட்டியல் ஒன்றை உதயநிதியும் அமைச்சர் அன்பில் மகேஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வருகிற எம்பி தேர்தலில் சில அமைச்சர்கள் தங்களது வாரிசுகளுக்கு சீட் கேட்டு முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஆனால் அமைச்சர்களின் வாரிசுகளுக்கோ அவர்கள் சொல்பவர்களுக்கோ இடமில்லை என்ற பேச்சு திமுக இளைஞரணிக்குள் பலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
‘இளைஞர்கள், கட்சிக்காக உழைப்பவர்கள், ஓரளவு பணம் செலவு பண்ணக் கூடியவர்கள் போன்ற தகுதிகளின் அடிப்படையில் அன்பில் மகேஷும் உதயநிதியும் இணைந்து முதல் கட்ட பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட், திமுக எத்தனை இடங்களில் நிற்கிறது என்பதைப் பொறுத்து இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் எம்பி தேர்தல் வேட்பாளர் தேர்வு என்பது முழுக்க முழுக்க உதயநிதியின் சாய்ஸ் ஆகவே இருக்கும். இதற்கான அச்சாரம் பசுமை வழிச் சாலையில் இருக்கும் அவரது குறிஞ்சி இல்லத்தில் போடப்பட்டுவிட்டது’ என்கிறார்கள்.
இந்தத் தகவலை அறிந்து அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஸ்டாலினை ’அண்ணன்’ என்று அழைத்த வீர முத்துவேலின் தந்தை: ஏன்?
காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தேசிய விருது: முதல்வர் கண்டனம்!