விசிக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில், மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 ஆயிரம் ஆண்கள், 22 ஆயிரம் பெண்கள் கஞ்சா பயன்படுத்துவதாகவும், 1,71,000 ஆண்கள், 6000 பெண்கள் ஓப்பியம் பயன்படுத்துவதாகவும், 1.92 லட்சம் ஆண்கள், 10 ஆயிரம் பெண்கள் மயக்கம் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்துவதாகவும் 7000 ஆண்கள், 1000 பெண்கள் கொக்கேய்ன் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்துவதாகவும் ஏ.டி.எஸ், புகைப்பதன் மூலம் மயக்கம் தரும் போதைப் பொருட்கள் (Inhalants) புத்தியை நிலை குலையச் செய்யும் போதைப் பொருட்கள் (Hallucinogens) ஆகியவற்றை 1. 82 லட்சம் ஆண்கள், 13 ஆயிரம் பெண்கள் பயன்படுத்துவதாகவும்‘ நாடாளுமன்ற மாநிலங்களவையில் 13.12.2023 அன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமான விடையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2023 திசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டில் சுமார் 4 கிலோ ஓப்பியமும், 2,98,678 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் 2021 ஆம் ஆண்டில் 21 கிலோ ஓப்பியமும், 1824 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது எனவும் 2022 ஆம் ஆண்டு 21 கிலோ ஓப்பியமும், 27,223 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு 543 வழக்குகளும் 2021 ஆம் ஆண்டு 6852 வழக்குகளும் 2022 ஆம் ஆண்டு 10,385 வழக்குகளும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது என்பது உறுதிப்படுகிறது.
மதுவைப் போல் அல்லாமல் போதைப் பொருட்கள் ஏற்கனவே இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் கூட போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
குறிப்பாக, பள்ளி -கல்லூரி மாணவர்களிடையே மதுவைக் காட்டிலும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, உதகை ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் ஒன்பது சதவீதம் பேர் மது, கஞ்சா, கூல்லிப் ஆகிய போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தை, ‘சமூகக் கல்விக்கான நிறுவனம்’ என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு உறுதியான-கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்”: விசிக மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்
உதயநிதியின் தனி செயலாளர்: யார் இந்த பிரதீப் யாதவ்?