மதுவிற்கு அனுமதி: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பரிமாற அரசு அனுமதி வழங்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, மாநாட்டு மண்டபம், கன்வென்ஷன் செண்டர், திருமண மண்டபம், விருந்து நடைபெறும் இடங்கள், விளையாட்டு மைதானங்களில் அரசிடம் உரிமம் பெற்று மதுபானம் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்காக மாநகராட்சி பகுதி, நகராட்சி அல்லது வேறு இடங்களில் அமைந்திருந்தால் அதற்கேற்றவாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் நிகழ்ச்சிக்கும் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்கள் எதிர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “செம விடியல்” என்று விமர்சித்துள்ளார்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து மக்களின் வரவேற்பைப் பெற்ற தமிழக அரசு மக்கள் நலன் கருதி திருமண மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வினியோகிக்க அனுமதிக்கும் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கினால் மோசமான சமுதாய சீரழிவையும் சாலை விபத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டதோடு இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக்கொள்ள வகைசெய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள்நலனில் சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மண்டபங்களில் அனுமதி இல்லை
பலரும் மது பரிமாறுவதற்கு எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருவதோடு தமிழ்நாடு அரசு அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது மட்டும் தான் மது பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் அனுமதி கிடையாது” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?
12 மணி நேர வேலை மசோதா : சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!