திருமண மண்டபங்களில் மது பரிமாற்றத்திற்கு அனுமதி கிடையாது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அரசு உரிமம் பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இன்று காலை அரசாணை வெளியிட்டிருந்தார்.
அதில், மாநாட்டு மண்டபம், கன்வெண்ஷன் செண்டர், திருமண மண்டபம், விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வணிக இடங்களில் உரிமம் பெற்றும் மது பரிமாறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதற்காக மாநகராட்சி பகுதியில் ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாயும், நகராட்சி பகுதிகளில் ஆண்டிற்கு 75,000 ரூபாயும், மற்ற இடங்களில் ஆண்டிற்கு 50,000 ரூபாயும் கட்டணம் செலுத்தி உரிமம் பெறலாம்.
அதுமட்டுமின்றி ஒரு நாள் நிகழ்ச்சிக்காக கூட அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
“சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகள் நடக்கின்ற போது, அதாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஐபிஎல் போட்டி போன்ற சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற போது மட்டும் மது பரிமாறுவதற்குச் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
இது எதனால் வழங்கப்படுகிறது என்றால், இந்த முறை தமிழ்நாட்டை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கின்றது.
எனவே சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய நடைமுறை தமிழ்நாட்டிலும் பின்பற்ற வேண்டும்.
சர்வதேச நிகழ்ச்சிகளில் மது பரிமாற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே திருமண மண்டபம் போன்ற மற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. ஐபிஎல் போட்டியின் மற்ற மாநிலங்களில் மது பரிமாறப்படுகிறது. சென்னையிலும் அதற்கான அனுமதியை வாங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
தோனிக்காக ஆட்டமிழந்தாரா ஜடேஜா?
அண்ணாநகர் கார்த்தி வீட்டில் ரெய்டு: திமுகவினர் போராட்டம்!