காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்கள் எல்லாம் கிடக்கின்றன, இது எனக்கு வருத்தத்தை தருகிறது என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் ஆளுநர் ரவி இன்று (அக்டோபர் 1), சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மையேசேவை திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது நமது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மகாத்மா காந்தியின் கோட்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
தன்னார்வலர்களுடன் இணைந்து காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ரவி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல, தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் தூய்மையை தெய்வீகம் என்று அழைத்தார். நம் நாட்டில் பொது இடங்களில் குப்பை கொட்டும் பழக்கம் உள்ளது. இது நமக்கு நல்லதல்ல.
தூய்மை இல்லாததால் நோய்கள் பரவி, பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். எனவே பல்கலைக் கழகங்கள் உட்பட கல்வி நிறுவனங்களில் மாதம் ஒருமுறையாவது தூய்மை இயக்கத்தை நடத்த வேண்டும்.
காந்தி மண்டப வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சில மது பாட்டில்களையும் பார்த்தேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, இந்த செயல் எனக்கு வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவுக்கு கிடைத்தது என்ன?
ஜாபர் சேட் வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!